/

யாரைத் தேர்வு செய்வது எனக் குழப்பமாக உள்ளது: விராட் கோலி

எந்த வீரரைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பமாக உள்ளதாக இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:06 pm

எழில்

அயர்லாந்துடன் நடைபெற்ற இரண்டாவது டி 20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

இந்நிலையில் அயர்லாந்துடன் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா எளிதாக வென்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி,  20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து இந்தியா 213 ரன்களை எடுத்தது. அயர்லாந்து தரப்பில் ஓ பிரையன் 3, பீட்டர் சேஸ் 1 விக்கெட்டை வீழ்த்தினர். 6 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 70 ரன்களை குவித்தார் ராகுல். சுரேஷ் ரெய்னா 3 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். பாண்டியா 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 9 பந்துகளில் 32 ரன்களை குவித்தும், மணிஷ் பாண்டே 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிரையனின் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியை பாண்டியா விளாசினார்.

12.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து அயர்லாந்து 70 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்திய தரப்பில் சஹால், குல்தீப் தலா 3 விக்கெட்டையும், உமேஷ் 2, சித்தார்த் கெளல், ஹார்திக் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ராகுல் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இதில் எந்த வீரரைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பமாக உள்ளதாக இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு யாரைத் தேர்வு செய்வது எனக் குழப்பமாக உள்ளது. ஆனால் இது ஒரு ஆரோக்கியமான பிரச்னை. யாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அவர்கள் அதை நன்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டுக்கு இது அற்புதமாக காலக்கட்டம். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து வீரர்கள் கடுமையாகப் போட்டியிட்டால் அதை எதிர்கொள்வதற்கான பேட்ஸ்மேன்கள் எங்களிடம் உள்ளார்கள். சாஹல், குல்தீப் யாதவ் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். மிகவும் போட்டி மனப்பான்மை கொண்ட தொடராக இது அமையும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.