இலங்கை கேப்டன் பதவியிலிருந்து மேத்யூஸ் நீக்கம்! புதிய கேப்டன் நியமனம்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சன்டிமல் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று இலங்கை கிரிக்கெட் சங்கம்...
இலங்கை கேப்டன் பதவியிலிருந்து மேத்யூஸ் நீக்கம்! புதிய கேப்டன் நியமனம்!

கடந்த வருடம் ஜூலை மாதம், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தோற்றதைத் தொடர்ந்து இலங்கை கேப்டன் ஏஞ்செலோ மேத்யூஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார். சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து ஆரம்பக்கட்ட சுற்றோடு வெளியேறிய இலங்கை அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து கேப்டன் பதவியிலிருந்து விலகினார் மேத்யூஸ். இதையடுத்து இலங்கை டெஸ்ட் கேப்டனாக தினேஷ் சன்டிமலும், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டியின் கேப்டனாக உபுல் தரங்காவும் நியமிக்கப்பட்டார்கள். 

எனினும், இலங்கை ஒரு நாள் மற்றும் டி-20 கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஏஞ்ஜெலோ மேத்யூஸ் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் நியமிக்கப்பட்டார். இலங்கையின் அணியின் புதிய பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்காவின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் மேத்யூஸ். இன்னும் 18 மாதங்களில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியில் வென்றாக வேண்டும். எனவே, கேப்டன் பொறுப்பை ஏற்பதை எனது கடமையாகக் கருதுகிறேன் என்றார் மேத்யூஸ். இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தினேஷ் சண்டிமல் நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அடுத்த 9 மாதங்களில் காட்சிகள் மாறிவிட்டன. 

தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைப் போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோற்ற இலங்கை அணி, முதல் சுற்றிலேயே போட்டியை விட்டு வெளியேறியது. இதையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் கேப்டன் சன்டிமல், இலங்கை ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

கேப்டன் பொறுப்பிலிருந்து விடுபடுமாறு மேத்யூஸுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வருகிற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சன்டிமல் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று இலங்கை கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com