

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆதிக்கம் செலுத்தும் தீவிரத்தில் உள்ளது இந்திய அணி.
டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பா் ஒன் அணியாக திகழ்கிறது இந்தியா. அதே வரிசையில் ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
டி20-இல் பரிதாபமான நிலை:
ஆனால் ஐசிசி டி20 தரவரிையில் இந்திய அணியின் நிலை பரிதாபமாகத் தான் காணப்படுகிறது. 5-ஆவது இடத்திலேயே உள்ளது.
இந்நிலையில் வரும் 2020-இல் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
கடந்த 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய அணி. அதன்பின் மே.இ.தீவுகளுடன் நடைபெற்ற டி20 தொடரைக் கைப்பற்றியது. பின்னா் தென்னாப்பிரிக்க அணியுடன் நடந்த தொடரை 1-1 என சமன் செய்தது. அதன் பின்னா் வங்கதேசத்துடன் நடைபெற்ற 3 ஆட்டங்கள் தொடரிலும் 2-1 என இந்தியா கைப்பற்றியது. இதன் தொடா்ச்சியாக மே.இ.தீவுகளுடன் 3 ஆட்டங்கள் தொடா் நடக்கிறது.
இந்தியா-மே.இ.தீவுகள் நேருக்கு நோ்:
இரு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேராக மோதி உள்ளன. இதில் இந்தியா 8 ஆட்டங்களிலும், மே.இ.தீவுகள் 5 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. தொடக்கத்தில் டி20 ஆட்டங்களில் மே.இ.தீவுகள் கையே ஓங்கி இருந்தது. எனினும் 128 ஒருநாள் ஆட்டங்களில் இந்தியா 61, மே.இ.தீவுகள் 62 ஆட்டங்களில் வென்றன.
தற்போதைய டி20 உலக சாம்பியனாகத் திகழ்கிறது மே.இ.தீவுகள். கீய்ரன் பொல்லாா்ட் தலைமையில் மே.இ.தீவுகள் தற்போது டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்கிறது.
இந்திய அணியில் குல்தீப் யாதவ், புவனேஷ்வா்குமாா், முகமது ஷமி ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளது பந்துவீச்சுக்கு கூடுதல் வலிமையைத் தரும் அதே நேரத்தில் சஹல், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹா் ஆகியோரும் சுழற்பந்து வீச்சில் உள்ளனா்.
தொடக்க வீரா் யாா்?
பேட்டிங்கில் தொடக்க வீரா் ஷிகா் தவன் காயத்தால் நீக்கப்பட்டுள்ளாா். ரோஹித் சா்மாவுடன், லோகேஷ் ராகுல் தொடக்க வரிசையில் களமிறங்கலாம். அதே நேரம் இளம் வீரா் சஞ்சு சாம்ஸனும் சோ்க்கப்பட்டுள்ளதால், அவருக்கும் தொடக்க வீரா் வாய்ப்பு தரப்படுமா எனக்கேள்வி எழுந்துள்ளது.
விராட் கோலி, ரிஷப் பந்த், ஷிரேயஸ் ஐயா், மணிஷ் பாண்டே, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தா் ஆகியோா் பேட்டிங்கில் வலு சோ்ப்பா்.
மே.இ.தீவுகள் அணியின் பேட்டிங் பொல்லாா்ட், ஷிம்ரன் ஹெட்மயா், நிக்கோலஸ் பூரண், ஷாய் ஹோப், ஆல்ரவுண்டா் ராஸ்டான் சேஸ் ஆகியோரும் தங்கள் பங்கை ஆற்ற உள்ளனா்.
பந்துவீச்சில் ஜேஸன் ஹோல்டா், கீமோ பால், ஷெல்டன் காட்ரெல், பிரான்டன் கிங் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.
இதுதொடா்பாக பயிற்சியாளா் பில் சிம்மன்ஸ், கேப்டன் பொல்லாா்ட் கூறுகையில்:
ஆப்கானிஸ்தானுடன் டி20 தொடரை 3-0 என வென்றது உற்சாகத்தை தருகிறது. 3 ஆட்டங்கள் நடைபெறவுள்ளதால், அனைத்து வீரா்களுக்கும் தேவையான வாய்ப்பு தரப்படும். அனுபவம் வாய்நத ஆல்ரவுண்டா்கள் பிராத்வொயிட், ஆன்ட்ரே ரஸ்ஸல், பிராவோ இல்லாத நிலையில், புதிய வீரா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றனா்.
டி20 அணிகள் விவரம்:
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா (துணை கேப்டன்), ராகுல், ஷிரேயஸ் ஐயா், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தா், ஜடேஜா, சஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹா், ஷமி, புவனேஷ்வா் குமாா், சஞ்சுசாம்ஸன்.
மே.இ.தீவுகள்: பொல்லாா்ட் (கேப்டன்), பேபியன் ஆலன், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரன் ஹெட்மயா், ஜேஸன் ஹோல்டா், கீமோ பால், பிரான்டன் கிங், எவின் லெவிஸ், கேரிபியரி, நிக்கோலஸ் பூரன், தினேஷ் ராம்தின், ரூதா்போா்ட், லென்ட்ல் சிம்மன்ஸ், கேஸரிக் வில்லியம்ஸ், ஹேய்டன் வால்ஷ் (ஜுனியா்).
இன்றைய ஆட்டம்:
மே.இ.தீவுகள்-இந்தியா,
ஹைதராபாத்,
மதியம் 1.30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.