நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாரம்பரிய கிரிக்கெட் வல்லரசுகளுக்கு  சவால் விடும் ஆப்கானிஸ்தான்

பாரம்பரிய கிரிக்கெட் வல்லரசுகளுக்கு சவால் விடும் வகையில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 7:36 pm

சுஜித்குமார்

பாரம்பரிய கிரிக்கெட் வல்லரசுகளுக்கு சவால் விடும் வகையில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கிரிக்கெட் ஆட்டத்தை கண்டுபிடித்தது இங்கிலாந்து எனக் கூறுவர். அதற்கேற்ப இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மே.இ.தீவுகள், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் கிரிக்கெட் வேரூன்றி பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதாக திகழ்கிறது.
மேற்கண்ட நாடுகளே கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட்டில் வல்லரசு நாடுகளாக திகழ்கின்றன. ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்றவை உலகக் கோப்பையை வென்ற பெருமையை பெற்றவை.

உள்நாட்டு போரால் சீரழிவு
அவற்றைத் தொடர்ந்து வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரக நாடுகள், உள்பட பல்வேறு நாடுகளில் கிரிக்கெட் ஆடப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான், பெரும்பாலும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கனோர் உயிரிழந்த நிலையில், அதே எண்ணிக்கையில் பலர் தங்கள் உடல் உறுப்புகளையும் இழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலும் 19-ஆம் நூற்றாண்டிலேயே கிரிக்கெட் ஜூரம் பரவி உள்ளது. கால்பந்து, கிரிக்கெட் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்கள் அந்நாட்டினர். 

அகதி முகாம்களில் பயிற்சி
உள்நாட்டு போரால் ஏராளமான ஆப்கன் மக்கள் அகதிகளாக பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு முகாம்களில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆட பழகிக் கொண்டனர். இந்நிலையில் கடந்த 1995-இல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உருவாகியது. பின்னர் 2001-இல் ஐசிசியில் இணை உறுப்பினராகவும், 2003-இல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிலும் உறுப்பினர் ஆனது.

தரவரிசையில் 8-ஆம் இடம்
10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற ஆப்கானிஸ்தானுக்கு 2017 ஜூன் மாதம் ஐசிசி முழு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கியது. இதில் டெஸ்ட் அந்தஸ்தும் அடங்கும். அதே போல் அயர்லாந்துக்கும் இதே அந்தஸ்து தரப்பட்டது. இதன் மூலம் கிரிக்கெட் ஆடும் நாடுகள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. வலுவான அணிகளான இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்றவற்றை பின்தள்ளி 8ஆம் இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான்.
முதன்முறையாக 2012 டி20 உலகக் கோப்பை, 2015-இல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற்றது. இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது ஆப்கன். பின்னர் 2016-இல் இந்தியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் அப்போதைய நடப்பு சாம்பியன் மே.இ.தீவுகளை வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ஜிம்பாப்வேயையும் வென்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.

அதிர்ச்சி தந்த ஆசிய கோப்பை 2018
கடந்த 2018 செப்டம்பரில் அபுதாபியில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றும்,இந்தியாவுடன் ஆட்டத்தை டை செய்தும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

சீரான வளர்ச்சி
இந்தியாவுடன் கடந்த 2018 ஜூன் மாதம் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் ஆட்டத்தில் ஆடியது ஆப்கானிஸ்தான். அதில் தோல்வியுற்றாலும்,டெஸ்ட் ஆடும் நாடு அந்தஸ்து கிடைத்தது. தற்போதைய ஆப்கன் அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், முஜிபூர் ரஹ்மான், மொகமது நபி, மொகமது ஷாசட், அஷ்கர் ஆப்கன் போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ரஷீத் கானுக்கு இந்தியாவின் ஐபிஎல் போட்டியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

டி20-இல் புதிய சாதனைகள் குவிப்பு
தற்போது டேராடூனில் நடைபெற்று வரும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது ஆப்கன். அதே நேரத்தில் 
இரண்டாவது டி20 ஆட்டத்தில் 20 ஓவர்களில் 278 ரன்களை குவித்து அதிக ரன்களை அடித்த  அணி என்ற சாதனையை படைத்தது. மேலும் பந்துவீச்சாளர் ரஷீத் கான் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.அதிக பார்ட்னர்ஷிப் 236 (ஸஸாய்-கானி), அதிகபட்ச சிக்ஸர் 16, ஒரு அணியாக அதிகபட்ச சிக்ஸர் 22 உள்பட பல்வேறு சாதனைகளை படைத்தது.
சொந்த மண்ணில் விளையாட முடியாமல், டேராடூனில் உள்ள விளையாட்டரங்கை தங்கள் சொந்த மைதானமாக கருதி பயிற்சி பெறுகிறது ஆப்கானிஸ்தான். சிறப்பான ஆட்டத்தின் மூலம் வல்லரசு கிரிக்கெட் நாடுகளுக்கு தொடர்ந்து சவால் விட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.