விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தென் ஆப்பிரிக்காவுக்கு 384 ரன்கள், இந்தியாவுக்கு 9 விக்கெட்டுகள் தேவை: 5-ம் நாளில் என்ன நடக்கும்?

கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

News image
Updated On :5 அக்டோபர் 2019, 12:24 pm

எழில்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற கடைசி நாளன்று அந்த அணிக்கு 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 384 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடந்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 502/7 ரன்களுக்கு டிக்ளோ் செய்தது. மயங்க் அகா்வால் 215, ரோஹித் 176 ரன்களை குவித்தனா். 3-ம் நாள் முடிவில், தனது முதல் இன்னிங்ஸில் 118 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. செனுரன் முத்துசாமி 12, கேசவ் மஹாராஜ் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி, 131.2 ஓவர்களில் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முத்துசாமி 33 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மஹாராஜ் 9, ரபடா 15 ரன்களுடன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இந்தியத் தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளும் ஜடேஜா 1 விக்கெட்டுகளும் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

Story image

இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, 4-ம் நாள் உணவு இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 25 ரன்கள், புஜாரா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ரோஹித் சர்மா சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளைப் பதம் பார்த்தார். 72 பந்துகளில் அரை சதமெடுத்தார் ரோஹித். ஆரம்பத்தில் மிகவும் பொறுமையாக விளையாடிய புஜாரா திடீரென தன்னுடைய ஆட்ட உத்தியை மாற்றினார். 

உணவு இடைவேளைக்குப் பிறகு புஜாராவின் ஆட்டம் தான் ரசிகர்களை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. முதலில் 62 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார் புஜாரா. இதனால் ரசிகர்களின் விமரிசனத்துக்கு ஆளாகினார். ஆனால் அடுத்த 77 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அசத்தினார் புஜாரா. இதனால் இன்றைய நாளின் 2-வது பகுதியின் கடைசி 20 ஓவர்களில் இந்திய அணிக்கு அதிக ரன்கள் கிடைத்தன. 106 பந்துகளில் அரை சதமெடுத்தார் புஜாரா. 

4-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 48 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 84, புஜாரா 75 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு புஜாரா ஒரு சிக்ஸர் அடித்து ஆச்சர்யப்படுத்தினார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவர் 81 ரன்களில் பிலாண்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். விரைவாக ரன்கள் சேர்க்க ஜடேஜா களமிறங்கினார். எதிர்கொண்ட முதல் ஓவரிலேயே முத்துசாமி பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தார் ஜடேஜா. இதன்பிறகு 133 பந்துகளில் தொடக்க வீரராகத் தனது 2-வது சதத்தைப் பூர்த்தி செய்தார் ரோஹித் சர்மா. தொடக்க வீரராகக் களமிறங்கிய முதல் டெஸ்டிலேயே இரு சதங்கள் அடித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். மேலும், இந்தியாவில் தொடர்ச்சியாக 7 இன்னிங்ஸில் 50+ ஸ்கோர்களை எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையையும் படைத்தார். 

பீடிட் வீசிய 56-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தார் ரோஹித் சர்மா. இதன்மூலம் தொடக்க வீரராகக் களமிறங்கிய முதல் டெஸ்டிலேயே உலக சாதனை நிகழ்த்தினார். இதற்கு முன்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தவொரு பேட்ஸ்மேனும் 12 சிக்ஸர்களுக்கு அதிகமாக அடித்ததில்லை. வாசிம் அக்ரம் தான் 12 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தார். அதனை முறியடித்து 13 சிக்ஸர்களை இந்த டெஸ்டில் அடித்துள்ளார் ரோஹித் சர்மா. அடுத்த ஓவரில் 127 ரன்களில் மஹாராஜா பந்துவீச்சில் ஸ்டம்பிங் முறையில் ரோஹித் ஆட்டமிழந்தார். இதற்கு முன்பு 137 முதல் தர கிரிக்கெட் இன்னிங்ஸில் ஒருமுறை கூட ரோஹித் சர்மா ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்ததில்லை. ஆனால், இந்த டெஸ்டில் இரு முறை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதுபோல ஒரு டெஸ்டில் இருமுறையும் ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரரும் இவர்தான். தொடக்க வீரராக விளையாடிய முதல் டெஸ்டிலேயே பல சாதனைகளை நிகழ்த்தி மறக்க முடியாத நினைவுகளை இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் அளித்துள்ளார் ரோஹித் சர்மா.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த கோலியும் ஜடேஜாவும் விரைவாக ரன்கள் சேர்த்தார்கள். ஜடேஜா 32 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்து ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானேவும் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 67 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் சேர்த்தபோது டிக்ளேர் செய்தார் கோலி. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கு அளிக்கப்பட்டது. விராட் கோலி 31, ரஹானே 27 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான எல்கரும் மார்க்ரமும் அஸ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சைக் கவனமாகக் கையாண்டார்கள். எனினும் எல்கரை 2 ரன்களில் வெளியேற்றினார் ஜடேஜா. 4-ம் நாளின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸில் 9 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.  கடைசி நாளன்று தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 384 ரன்கள் தேவைப்படுகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.