பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராக மிஸ்பா உல் ஹக் நியமனம்!

பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தேர்வாகியுள்ளார். 
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராக மிஸ்பா உல் ஹக் நியமனம்!

பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தேர்வாகியுள்ளார். 

பாகிஸ்தான் அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்று பெயர் பெற்ற மிஸ்பா உல் ஹக்கைத் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. மேலும், முன்னாள் வீரர் வக்கார் யூனுஸைப் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமித்துள்ளது. இருவருக்கும் மூன்று வருட ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. மிஸ்பா, பாகிஸ்தான் அணிக்காக 75 டெஸ்டுகள், 162 ஒருநாள், 39 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 5-ம் இடம் பிடித்து வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விலகினார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் கோபமாக உள்ள நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களுடனான கூட்டம் ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொண்டார். வாஷிங்டன் டிசி-யில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சிறந்த வீரர்களைக் கொண்டு அடுத்த உலகக் கோப்பைக்கான உலகின் சிறந்த அணியை உருவாக்கி வருகிறேன். என் திட்டங்கள் குறித்து இப்போது கூறமாட்டேன். என் வார்த்தைகளைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

பிறகு, தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்தரை நீக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். மேலும் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் அஸார் முகமது, டிரெய்னர் கிராண்ட் லுடென் ஆகியோருடைய ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க மறுத்தது. பிறகு, மூத்த வீரர்களான சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகிய இரு வீரர்களுக்கும் ஒப்பந்தம் மறுக்கப்பட்டது. 2019-20-ம் ஆண்டுக்கான ஒப்பந்தப் பட்டியலில் இரு வீரர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. ருநாள் கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார் சோயிப் மாலிக். முகமது ஹபீஸ் சமீபகாலமாக குறைவான ரன்களே எடுத்துள்ளார். எனினும் இருவரும் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறாவிட்டாலும் பாகிஸ்தான் அணிக்கு அவர்களைத் தேர்வு செய்ய இந்த மாற்றம் தடையாக இருக்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.

செப்டம்பர் 27 முதல் தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்கவுள்ளது. 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன. இதன்பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கிறது. மிஸ்பா - வக்கார் கூட்டணியின் பணிகளை இத்தொடர்களில் காண கிரிக்கெட் உலகம் ஆவலாகக் காத்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com