/

அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அனுமதி அளித்தது பிசிசிஐ

ஐபிஎல் 2020 போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2020, 4:50 am

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு சமீபத்தில் அனுமதி தந்தது. இதையடுத்து ஐபிஎல் போட்டியை நடத்த ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ அனுமதி தந்துள்ளது.

அடுத்த வாரம் ஐபிஎல் தலைமை அதிகாரி ஹேமங் அமின், ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று மைதானங்களையும் ஏற்பாடுகளையும் பார்வையிட உள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கெனவே ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அனுப்பிவிட்டாலும் ஐக்கிய அரபு அமீரக அரசு அதற்கு அனுமதி அளிக்க வேண்டியுள்ளதால் அதுகுறித்த பணிகளையும் ஹேமங் அமின் மேற்கொள்வார். ஐபிஎல் 2020 போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2014-ம் ஆண்டில் தேர்தல் காரணமாக ஐபிஎல் போட்டியின் முதல் 20 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.