பகலிரவு பயிற்சி ஆட்டம்: 194 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி

55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் பும்ரா...
பகலிரவு பயிற்சி ஆட்டம்: 194 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் இந்தியன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்குள் சுருண்டது.

இந்தியன்ஸ் - ஆஸ்திரேலியா ஏ ஆகிய அணிகள் மோதும் பகலிரவு பயிற்சி ஆட்டம் சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.     

டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய அணி இரு மூன்று நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது. 

இன்று தொடங்கிய 2-வது பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற ரஹானே தலைமையிலான இந்தியன்ஸ் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 40 ரன்களிலும் மயங்க் அகர்வால் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். 58 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த ஷுப்மன் கில், கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு விளையாடிய இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்கள். எனினும் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா - சிராஜ் ஜோடி 71 ரன்கள் குவித்து அசத்தினார்கள். இந்த ஆட்டத்தில் தனது அதிக முதல்தர ரன்களை எடுத்தார் பும்ரா. 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிராஜ் 22 ரன்கள் எடுத்தார்.  

இந்தியன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 48.3 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆஸி. அணித் தரப்பில் அபாட், ஜேக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com