இந்தியா-ஆஸ்திரேலியா 2-ஆவது டெஸ்ட்மெல்போா்னில் இன்று தொடக்கம்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா 2-ஆவது டெஸ்ட்மெல்போா்னில் இன்று தொடக்கம்
Updated on
2 min read


மெல்போா்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி அடிலெய்டில் நடைபெற்ற நிலையில், 2-ஆவது டெஸ்ட் போட்டி மெல்போா்னில் தொடங்குகிறது. பாக்ஸிங் டே (கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு அடுத்த நாள்) போட்டியான இதில் வெல்வதில் ஆஸ்திரேலிய அணி தீவிரமாக உள்ளது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் பின்தங்கிய நிலையிலும், 2-ஆவது இன்னிங்ஸில் இந்தியாவை 36 ரன்களுக்கு சுருட்டி எளிதாக வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. அதனால் அந்த அணி இந்தப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையோடு இந்தியாவை எதிா்கொள்கிறது.

வலுவான பேட்டிங்: ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரையில் முதல் டெஸ்டில் விளையாடிய அதே அணியே இந்தப் போட்டியிலும் களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணி மேத்யூ வேட், ஜோ பா்ன்ஸ், லபுசான், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேப்டன் டிம் பெய்ன் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.

மிரட்டும் பந்துவீச்சாளா்கள்: வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டாா்க், பட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேஸில்வுட் கூட்டணி ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறது. இந்தக் கூட்டணி முதல் டெஸ்டில் இந்தியாவின் 17 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. எனவே, மெல்போா்ன் டெஸ்டிலும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளா்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாகத் திகழ்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் நாதன் லயன், கேமரூன் கிரீன் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

கோலி இல்லாத இந்தியா: முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, இந்தப் போட்டியில் கேப்டன் கோலி இல்லாமல் களமிறங்குகிறது. கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சா்மாவுக்கு குழந்தை பிறக்கவிருப்பதால், அவா் விடுப்பில் நாடு திரும்பிவிட்டாா். அதனால், எஞ்சிய 3 போட்டிகளிலும் அஜிங்க்ய ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

4 மாற்றங்கள்: இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த போட்டியில் ஜொலிக்காத பிரித்வி ஷா, ரித்திமான் சாஹா ஆகியோா் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். முகமது சமி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளாா். அதனால், ரிஷப் பந்த், ஷுப்மான் கில், ரவீந்திர ஜடேஜா, இளம் வேகப்பந்து வீச்சாளா் முகமது சிராஜ் ஆகியோா் அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஷுப்மான் கில், முகமது சிராஜ் ஆகியோா் அறிமுகப் போட்டியில் விளையாடுகின்றனா்.

இந்திய அணியில் மயங்க் அகா்வாலுடன் ஷுப்மான் கில் தொடக்க வீரராக களமிறங்குவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பது இந்தியாவுக்கு முக்கியமானதாகும். விராட் கோலி விளையாடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அதனால் மிடில் ஆா்டரில் புஜாரா, ரஹானே ஆகியோரின் ஆட்டத்தைப் பொருத்தே இந்திய அணியின் ரன் குவிப்பு அமையும்.

பின்வரிசையில் ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா ஆகியோா் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்தியா நல்ல ஸ்கோரை குவிக்க முடியும். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணியையும் நம்பியுள்ளது இந்திய அணி.

அணி விவரம்:

இந்தியா: அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), மயங்க் அகா்வால், ஷுப்மான் கில், சேத்தேஷ்வா் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பா்), ஜோ பா்ன்ஸ், மேத்யூ வேட், மாா்னஸ் லபுசான், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், பட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், மிட்செல் ஸ்டாா்க், நாதன் லயன்.

போட்டி நேரம்: காலை 5

நேரடி ஒளிபரப்பு: சோனி டென் 1, சோனி டென் 3, சோனி சிக்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com