அப்படி ஓர் அடி எனக்குத் தேவைப்பட்டது: காபி வித் கரண் சர்ச்சை குறித்து கே.எல். ராகுல்!

கடந்த வருடம் காபி வித் கரண் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சையில் மாட்டிக்கொண்ட கே.எல். ராகுல் அதுபற்றி மனம் திறந்துள்ளார்.
அப்படி ஓர் அடி எனக்குத் தேவைப்பட்டது: காபி வித் கரண் சர்ச்சை குறித்து கே.எல். ராகுல்!

கடந்த வருடம் காபி வித் கரண் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சையில் மாட்டிக்கொண்ட கே.எல். ராகுல் அதுபற்றி மனம் திறந்துள்ளார்.

ஒரு பேட்டியில் ராகுல் கூறியதாவது: எல்லோரும் காலம் இதை மாற்றும் என்றார்கள். ஆனால் ஓர் இளைஞனால் அப்படிப் பார்க்க முடியாது. ஆஸ்திரேலியாவில் நான் நன்றாக விளையாடவில்லை. அந்த விரக்தியில் இருந்தேன். சர்ச்சையினால் சமூகம் என்ன சொல்லுமோ என என் பெற்றோர் மிகவும் கவலைப்பட்டார்கள். 

நான் செம கடுப்பில் இருந்தேன். எதைச் செய்யவும் விருப்பமில்லை. கிரிக்கெட் பயிற்சி, கோல்ப் விளையாட்டினால் இந்தச் சர்ச்சையைக் கொஞ்சம் மறந்தேன். காலம் காயத்தைக் குணப்படுத்தும், நடப்பது எல்லாம் நன்மைக்கே போன்ற தேய்வழக்கு அறிவுரைகள் எல்லாம் இப்போது சரியாக இருப்பது போல உள்ளன. 

நான் எந்தத் திசையில் செல்லவேண்டும் என்பதை உணர அப்படி ஓர் அடி எனக்குத் தேவைப்பட்டது. கிரிக்கெட்டைத் தவிர வேறு எதிலும் நான் உருப்படியாக இல்லை என்பதை உணர்ந்தேன். கிரிக்கெட்டுக்காக முழுவதையும் அர்ப்பணிக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். இதன்பிறகு என் கவனம் சரியாக இருந்தது. என்னை வலுவாக்கி, ஓர் ஒழுங்குடன் செயல்பட வைத்தது என்று கூறியுள்ளார்.

கடந்த வருடம், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சிக்கல்களுக்கு ஆளானார்கள். காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் பெண்கள் தொடர்பாக தரக்குறைவான கருத்துக்களை கூறினர் என கடும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக இருவரிடம் விளக்கம் கேட்டது பிசிசிஐ. ஆஸ்திரேலியாவில் இருந்து 2 பேரையும் நாடு திரும்புமாறு பிசிசிஐ உத்தரவிட்டது. மேலும் தற்காலிகமாக சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டனர். இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரி கடிதம் அளித்தனர். பின்னர் இப்பிரச்னை குறித்து பிசிசிஐ சிஓஏ உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. மத்தியஸ்தரை நியமிக்கப்படும்படி மனு தாக்கல் செய்தது. பாண்டியா-ராகுல் பிரச்னை மீது விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் முடிவை நிறுத்தி வைத்தது. இதையடுத்து இருவரும் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்று ஆடி வந்தனர். இதற்கிடையே ஓய்வு பெற்ற நீதிபதி டிகே.ஜெயினை பிசிசிஐ மத்தியஸ்தராக உச்சநீதிமன்றம் நியமித்தது. அவர் பாண்டியா-ராகுல் பிரச்னை குறித்து விசாரணை மேற்கொண்டார். இருவரையும் அழைத்து நேரில் விசாரணை செய்தார். பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் தொடர்பாக இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் பணியின் போது உயிரிழந்த துணை ராணுவ படைகள் விதவையர் 10 பேருக்கு தலா ரூ.1 லட்சத்தை வழங்க வேண்டும். மேலும் ரூ.10 லட்சத்தைப் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்துக்கு வைப்பு நிதியாக இருவரும் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவை அனைத்தையும் 4 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com