தோல்வியால் துவண்டு விடக் கூடாது: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்குப் பிரதமர் அறிவுரை

உங்களுடைய குடும்பம் மல்யுத்த விளையாட்டுக்கு அதிகமாகப் பங்களித்துள்ளது. வெற்றியால் எப்படி ஆணவம் உண்டாகக்கூடாதோ...
தோல்வியால் துவண்டு விடக் கூடாது: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்குப் பிரதமர் அறிவுரை

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதியில் தோல்வியடைந்தார். முதல் ஆட்டத்தில் இந்தியாவின் வினேஷ் போகத், ரியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற சோஃபியா மேட்சனை 7-1 என்கிற புள்ளிக்கணக்கில் வென்றார். இதனால் காலிறுதிக்குத் தகுதியடைந்தார் வினேஷ் போகத். இதையடுத்து காலிறுதியில் பெலாரஸின் வனேசாவை எதிர்கொண்டார். வினேஷ் போகத்தின் தாக்குதலைச் சாமர்த்தியமாகக் கையாண்டு சிறப்பாக விளையாடிய வனேசா, புள்ளிகள் அதிகம் எடுத்து பிறகு கடைசிக்கட்டத்தில் வினேஷ் போகத்தைக் கீழே சரிய வைத்து வெற்றி கண்டார். 

இதன்பிறகு டோக்கியோ ஒலிம்பிக்ஸில் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் வினேஷ் போகத் போட்டிகளில் விளையாட இடைக்காலத் தடை விதித்தது இந்திய மல்யுத்த சம்மேளனம். இதன்பிறகு தோல்வியாலும் அதனால் எழுந்த விமர்சனங்களாலும் மனத்தளவில் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதனால் தனக்கு டோக்கியோவில் தோல்வி ஏற்பட்டது என்றும் ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்தார் வினேஷ் போகத். நான் முழுவதுமாக உடைந்துள்ளேன். மீண்டும் விளையாடுவேனா என்பது சந்தேகம் தான் என அந்தப் பேட்டியில் அவர் கூறியிருந்தார். 

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற இந்திய அணியினரை திங்கள்கிழமை தனது இல்லத்துக்கு அழைத்து விருந்தளித்த பிரதமா் நரேந்திர மோடி, ஒலிம்பிக்ஸில் அவா்களது பங்களிப்புக்காகப் பாராட்டு தெரிவித்தாா். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட பதக்கம் வென்ற அனைத்து போட்டியாளா்களிடமும் உரையாடி அவா்களுக்குப் பாராட்டு தெரிவித்த பிரதமா் மோடி, இதர போட்டியாளா்களின் ஒலிம்பிக்ஸ் அனுபவத்தைக் கேட்டறிந்து அவா்களையும் உற்சாகப்படுத்தினாா். 

இந்த  நிகழ்ச்சியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை அழைத்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி. நான் உங்களுடைய திறமைக்கு ரசிகனாக உள்ளேன். உங்களுடைய குடும்பம் மல்யுத்த விளையாட்டுக்கு அதிகமாகப் பங்களித்துள்ளது. வெற்றியால் எப்படி ஆணவம் உண்டாகக்கூடாதோ அதேபோல, தோல்வியால் துவண்டுவிடவும் கூடாது என்று வினேஷ் போகத்துக்கு மோடி அறிவுரை கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com