அறுவைச் சிகிச்சை செய்துகொண்டது ஏன்?: ஆர்ச்சர் விளக்கம்

ஆறு மாதங்கள் வீட்டில் உட்கார்ந்திருப்பது பெரிய விஷயமில்லை.
அறுவைச் சிகிச்சை செய்துகொண்டது ஏன்?: ஆர்ச்சர் விளக்கம்

பல மாதங்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டாலும் காயத்திலிருந்து ஒரேடியாக விடுபடவே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோஃப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் போட்டியிலிருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதையடுத்து தற்போது ஓய்வில் உள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார்.

தன்னுடைய நிலை பற்றி ஆங்கில ஊடகம் ஒன்றில் ஆர்ச்சர் கூறியதாவது:

2021-ம் ஆண்டில் என்னால் மீண்டும் விளையாட முடியாது என்பதை அறிந்தபோது அதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் எதுவுமே ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளவன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் தான் மிக முக்கியம். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஆஷஸ் தொடர்களில் விளையாடாமல் இருப்பது வேதனையளிக்கிறது. டி20 உலகக் கோப்பையையும் தவறவிடுகிறேன். இப்போது எனக்கு 26 வயதுதான். என்னுடைய சிறந்த கிரிக்கெட் நாள்கள் இனிமேல் தான் வரும் என்பதில் நம்பிக்கையாக உள்ளேன்.

மே மாதம் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதன் காரணமே, இப்பிரச்னையிலிருந்து முழுவதுமாக விடுபடத்தான். இந்தப் பிரச்னை மறுபடியும் ஏற்படக்கூடாது. மைதானத்துக்குச் சென்று விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்தின் வெற்றிகளுக்கு நான் உதவவேண்டும். அதனால் எப்போதும் மீண்டும் விளையாடுவது என்பதில் நான் எச்சரிக்கையாக உள்ளேன். அடுத்த வருடம் மார்ச்சில் மேற்கிந்தியத் தீவுகளில் இங்கிலாந்து அணி மூன்று டெஸ்டுகளில் விளையாடுகிறது. அதில் நான் விளையாடலாம். எனினும் என்னால் உறுதியாகக் கூற முடியாது. விரைவில் சிறப்பு மருத்துவரை நான் காணவுள்ளேன். கடந்த இரண்டு வருடங்களில் பல அணிகளுக்காக நான் தொடர்ந்து விளையாடியுள்ளேன். அந்தக் காயத்தால் ஒரு வருடம் முழுக்க வீட்டில் இருந்திருக்கலம். எனவே ஆறு மாதங்கள் வீட்டில் உட்கார்ந்திருப்பது பெரிய விஷயமில்லை. இப்படிக் காயமடையும் முதல் வீரரும் நான் இல்லை, கடைசி வீரரும் நான் இல்லை. அடுத்த வருடத் தொடக்கத்தில் நன்குக் குணமடைந்து மீண்டும் விளையாட வருவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com