டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்குப் பொன்னான நாள்: ஒரே நாளில் ஐந்து பதக்கங்கள்!

15 முதல் 20 பதக்கங்களை வெல்லும் கனவில் உள்ளது இந்தியா...
சுமித் அண்டில்
சுமித் அண்டில்


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரே நாளில் இரண்டு தங்கம் உள்பட இந்தியாவுக்கு ஐந்து பதக்கங்கள் கிடைத்துள்ளன.

மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உதவும் பாராலிம்பிக் போட்டி 2020 டோக்கியோவில் இன்று தொடங்கி செப். 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் பாராலிம்பிக் போட்டி நடத்தப்படும். 

இந்தியாவில் இருந்து 54 போ் கொண்ட அணி 9 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. 

பாராலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்திய அணி இதற்கு முன்பு மொத்தமாகவே 12 பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. 1960 முதல் இப்போட்டி நடைபெற்று வருகிறது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களை விடவும் இம்முறை கிட்டத்தட்ட மும்முடங்கு வீரர்களுடன் டோக்கியாவுக்கு வந்திறங்கியுள்ளது இந்திய அணி. ரியோவில் இந்தியா சார்பாக 19 பேர் மட்டுமே போட்டியிட்டார்கள். ரியோவில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது. 

இதற்கு முன்பு ஒட்டுமொத்தமாக 12 பதக்கங்களை வென்றாலும் இம்முறை ஒரே ஒலிம்பிக்ஸில் 15 முதல் 20 பதக்கங்களை வெல்லும் கனவில் உள்ளது இந்தியா. இந்த இலக்கை அடையும் சாத்தியம் இருப்பதாகவே இன்றைய நிகழ்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இன்று இந்தியாவுக்குப் பதக்க மழைதான். 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என ஒரே நாளில் ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது.

அவனி லெகாரா
அவனி லெகாரா

மகளிருக்கான 10 மீ. ஏர் ரைபிள் போட்டியில் 249.6 புள்ளிகளுடன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது அவனி லெகாரா. இதன்மூலம் பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார்.  

ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இரு பதக்கங்கள் கிடைத்தன. தேவேந்திரா வெள்ளிப் பதக்கமும் சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கமும் வென்றார்கள். 

வட்டு எறிதல் எஃப் 56 போட்டியில் இந்தியாவின் யோகேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

தேவேந்திரா, சுந்தர் சிங் குர்ஜார்
தேவேந்திரா, சுந்தர் சிங் குர்ஜார்

ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுமித் அண்டில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஈட்டி எறிதல் எஃப் 64 பிரிவில் கலந்துகொண்ட இந்தியாவின் சுமித் அண்டில் முதல்முறை 66.95 மீ. தூரம் வீசினார். இது ஓர் உலக சாதனையாகும். 2-வது முறை அதை விடவும் அதிகத் தூரம் வீசி மற்றொரு உலக சாதனையை நிகழ்த்தினார். 68.08 மீ. ஒரே போட்டியில் மூன்று முறை உலக சாதனை படைத்து அனைவர் கவனத்தையும் சுமித் அண்டில் ஈர்த்துள்ளார். 5-வது முயற்சியில் 68.55 மீ. தூரம் எறிந்து மூன்றாவது முறையாக உலக சாதனை படைத்தார். இந்தப் போட்டிக்கு முன்பு அதிகபட்சமாக 62.88 மீ. தூரம் மட்டுமே அவர் வீசியிருந்தார். இதனால் அவருடைய இன்றைய ஆட்டத்திறன் அனைவராலும் வெகுவாக ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது.

பதக்கப் பட்டியலில் இந்திய அணி 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலத்துடன் 7 பதக்கங்களுடன் 26-வது இடத்தில் உள்ளது.

ஒரே நாளில் ஐந்து பதக்கங்களை வென்றதால் இந்திய ரசிகர்கள் பாராலிம்பிக்ஸ் போட்டியின் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com