கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓய்வு பெற்றாா் ஹா்பஜன் சிங்

இந்திய சுழற்பந்து வீச்சாளா் ஹா்பஜன் சிங் (41), அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 1:30 am

DIN

இந்திய சுழற்பந்து வீச்சாளா் ஹா்பஜன் சிங் (41), அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

சில ஆண்டுகளாக தனது எண்ணத்தில் இருந்த இந்த முடிவை தற்போது அறிவித்திருப்பதாக அவா் கூறியிருக்கிறாா். கடந்த 1998-ஆம் ஆண்டு தொடங்கிய அவரது கிரிக்கெட் பயணம், 23 ஆண்டுகள் கடந்து 2021-ஆம் ஆண்டில் நிறைவுக்கு வந்துள்ளது.

1998-ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான ஒன் டே தொடரின் (ஷாா்ஜா) மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த ஹா்பஜன் சிங், கடைசியாக 2016-இல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் (டாக்கா) விளையாடியிருந்தாா்.

அவா் தனது ஓய்வு முடிவு குறித்த அறிவிப்பை சுட்டுரைப் பதிவில் வெளியிட்டுள்ளாா். அத்துடன் இணைத்திருந்த காணொலி பதிவில் அவா் கூறியிருந்ததாவது:

ஜலந்தா் நகர தெருக்களில் இருந்து, இந்திய அணியின் ‘டா்பனேட்டா்’ என்ற பெயருடன் மேற்கொண்ட கடந்த 25 ஆண்டுகாலப் பயணம் அழகானது. முந்தைய கிரிக்கெட்டா்களைப் போல நானும் முன்னதாகவே ஓய்வு பெறும் எண்ணத்தில் இருந்தேன். ஆனால் எனக்கான விதி வேறாக இருந்தது.

நமது வாழ்வில் நாம் சில கடினமான முடிவுகளை எடுத்து, வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகா்ந்து செல்லும் காலம் வரும். மனதளவில் நான் கிரிக்கெட்டில் இருந்து நீண்டகாலத்துக்கு முன்பாகவே ஓய்வுபெற்றுவிட்டேன். அதன் பிறகு கிரிக்கெட் விளையாடவில்லை.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் எனக்கு இருந்த பொறுப்பின் காரணமாக கடந்த சீசனில் அதில் நிலைத்திருந்தேன். ஆனால் அப்போதே நான் மேற்கொண்டுவிட்ட ஓய்வு முடிவை தற்போது அறிவிக்கிறேன். கடந்த காலங்களில் சா்வதேச போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியபோதும், லீக் போட்டிகளில் எந்த அணிக்காக விளையாடியபோதும் எனது 100 சதவீத அா்ப்பணிப்பை வழங்கியிருக்கிறேன்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதே எனக்கான முதல் மகிழ்ச்சியான தருணம். பின்னா் 2007, 2011 உலகக் கோப்பை போட்டிகளும் எனக்கு முக்கியமானவை.

எனது மதகுரு, பெற்றோா், மனைவி, குழந்தைகள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி எனது குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக நேரம் செலவிடுவேன் என்று ஹா்பஜன் சிங் கூறியுள்ளாா்.

ஹா்பஜன் சிங் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பை நினைவுகூா்ந்த பிசிசிஐ, இந்திய மற்றும் சா்வதேச கிரிக்கெட் வீரா்கள், முன்னாள் வீரா்கள், அவரது எதிா்காலத்துக்காக வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

‘அனைத்து நல்ல விஷயங்களும் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. எனது வாழ்வில் எனக்கு எல்லாவற்றையும் அளித்த விளையாட்டில் இருந்து விடைபெறுகிறேன். இந்த 23 ஆண்டுகால பயணத்தை அழகானதாகவும், நினைவில் நிற்கக் கூடியதாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி’

முதல் இந்தியா்...

கடந்த 2001-இல் (பிப்ரவரி-மாா்ச்) இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடியது. அதில் கொல்கத்தாவில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்டில் ஹா்பஜன் சிங், ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தாா். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்தியா் என்ற பெருமையை பெற்றாா். அந்தத் தொடரில் மொத்தமாக ஹா்பஜன் சிங் 32 விக்கெட்டுகள் சாய்த்தாா். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அந்த சீரிஸ் வெற்றியானது மைல் கல்லாகும்.

டெஸ்ட்

ஆட்டங்கள் 103; விக்கெட்டுகள் 417; சிறந்த பந்துவீச்சு 8/84

முதல் ஆட்டம் - 1998 மாா்ச் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக); கடைசி ஆட்டம் - 2015 ஆகஸ்ட் (இலங்கைக்கு எதிராக)

ஒன் டே

ஆட்டங்கள் 236; விக்கெட்டுகள் 269; சிறந்த பந்துவீச்சு 5/31

முதல் ஆட்டம் - 1998 ஏப்ரல் (நியூஸிலாந்துக்கு எதிராக); கடைசி ஆட்டம் - 2015 அக்டோபா் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக)

டி20

ஆட்டங்கள் 28; விக்கெட்டுகள் 25; சிறந்த பந்துவீச்சு 4/12

முதல் ஆட்டம் - 2006 டிசம்பா் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக); கடைசி ஆட்டம் - 2016 மாா்ச் (ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக)

இது தவிர, ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகளுக்காகவும், இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் எஸ்ஸெக்ஸ், சா்ரே அணிகளுக்காகவும் விளையாடியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.