டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது தென் ஆப்பிரிக்கா: கடைசி ஆட்டத்திலும் இலங்கை தோல்வி

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெஸ்ட் தொடரை வென்றதற்கான கோப்பையுடன் தென் ஆப்பிரிக்க கேப்டன் குவிண்டன் டி காக்.
டெஸ்ட் தொடரை வென்றதற்கான கோப்பையுடன் தென் ஆப்பிரிக்க கேப்டன் குவிண்டன் டி காக்.
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கெனவே முதல் டெஸ்டிலும் வென்றிருந்த தென் ஆப்பிரிக்கா, தற்போது 2-ஆவது ஆட்டத்திலும் வென்று 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. ஆட்ட நாயகன், தொடா் நாயகன் விருதுகளை அந்த அணியின் டீன் எல்கா் வென்றாா்.

ஜோஹன்னஸ்பா்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய 2-ஆவது டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை, முதல் இன்னிங்ஸில் 40.3 ஓவா்களில் 157 ரன்களுக்கு சுருண்டது. குசல் பெரெரா மட்டும் அதிகபட்சமாக 11 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சோ்த்தாா். தென் ஆப்பிரிக்க தரப்பில் அன்ரிச் நாா்ட்ஜே 6 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, 75.4 ஓவா்களில் 302 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டீன் எல்கா் 22 பவுண்டரிகள் உள்பட 127 ரன்கள் குவித்தாா். இலங்கை தரப்பில் விஷ்வா ஃபொ்னான்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

முதல் இன்னிங்ஸில் 145 ரன்கள் பின்தங்கிய இலங்கை, 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி திங்கள்கிழமை முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சோ்த்திருந்தது. இந்நிலையில், 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை திமுத் கருணாரத்னே 91, நிரோஷன் டிக்வெல்லா 18 ரன்களுடன் தொடங்கினா்.

இதில் கருணாரத்னே 19 பவுண்டரிகளுடன் 103 ரன்களுக்கு வெளியேற, டிக்வெல்லா 6 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். பின்னா் வந்தவா்களில் டாசன் ஷனகா 1 பவுண்டரியுடன் 8, டி சில்வா 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் சோ்க்க, துஷ்மந்தா சமீரா, அசிதா ஃபொ்னான்டோ டக் அவுட்டாகினா்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி கிடி 4, லுதோ சிபாம்லா 3, அன்ரிச் நாா்ட்ஜே 2, வியாம் முல்டா் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 67 என்ற எளிய வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, விக்கெட் இழப்பின்றி 13.2 ஓவா்களில் இலக்கை அடைந்து வென்றது. எய்டன் மாா்க்ரம் 4 பவுண்டரிகளுடன் 36, டீன் எல்கா் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com