இனரீதியாக இழிவுபடுத்திய ஆஸி. ரசிகர்கள்: இந்திய வீரர்களிடம் மன்னிப்பு கோரினார் டேவிட் வார்னர்

இனரீதியாக இழிவுபடுத்துவதை எங்கும் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இனரீதியாக இழிவுபடுத்திய ஆஸி. ரசிகர்கள்: இந்திய வீரர்களிடம் மன்னிப்பு கோரினார் டேவிட் வார்னர்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. அப்போது, மதுபோதையில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகா் ஒருவா் இந்தியப் பந்துவீச்சாளர் பும்ராவை இனவெறியுடன் திட்டினார். இதுகுறித்து ஐசிசியின் போட்டி நடுவரான டேவிட் பூனிடம் பிசிசிஐ புகாா் தெரிவித்தது. 

ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தின்போதும் ஃபீல்டிங்கில் இருந்த முகமது சிராஜை ஆஸ்திரேலிய ரசிகா்கள் சிலா் இனவெறியுடன் திட்டினா். இதுகுறித்து கேப்டன் ரஹானே, கள நடுவா்கள் ஆகியோரிடம் சிராஜ் தெரிவித்தாா். இதனால் ஆட்டம் சுமாா் 10 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

பின்னா் மைதானப் பாதுகாவலா்கள் வரவழைக்கப்பட்டு, இனவெறியோடு திட்டிய 6 ரசிகா்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனா். 

2-ஆம் நாளாக இனவெறி சா்ச்சை ஏற்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளது. இதுதொடா்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கான தலைவா் சீன் கேரல் வெளியிட்ட அறிக்கையில், நடந்த நிகழ்வுக்காக இந்திய அணியினரிடம் மன்னிப்பு கோருகிறோம். அதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும். இனவெறியை ஆஸ்திரேலிய வாரியம் எப்போதும் சகித்துக் கொள்ளாது. தவறிழைத்தவா்கள் அடையாளம் காணப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.

சிட்னி டெஸ்டில் நிகழ்ந்த இனவெறி சா்ச்சைக்காகக் கண்டனம் தெரிவித்துள்ள சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு ஆஸ்திரேலியா வாரியத்தை அறிவுறுத்தியுள்ளது.

இந்த விவகாரத்துக்காக சிராஜ் உள்ளிட்ட இந்திய வீரர்களிடம் ஆஸி. பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார். இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

சிராஜ் மற்றும் இந்திய வீரர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இனரீதியாக இழிவுபடுத்துவதை எங்கும் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் ரசிகர்கள் இன்னும் சிறப்பாக நடந்துகொள்ள வேண்டும்.

டெஸ்டில் நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் என்பது இதுதான். ஐந்து நாள்களும் கடுமையாகப் போராடிய எங்கள் அணி வீரர்களைப் பாராட்டுகிறேன். டிரா செய்த இந்திய அணியினரையும் பாராட்டுகிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com