வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இந்த ஒரு தொடரில் உருவாக்கப்பட்டதல்ல இந்திய அணி: சாதனை வெற்றியில் கோலிக்கும் பங்கு அளிக்கும் ரவி சாஸ்திரி

இந்த அணி, இந்த ஒரு தொடரில் உருவாக்கப்பட்டதல்ல. கடந்த ஐந்தாறு வருடங்களில் உருவாக்கப்பட்டது.

News image
Updated On :19 ஜனவரி 2021, 10:35 am

DIN

ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டுமொருமுறை டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணி, இந்த ஒரு தொடரில் உருவாக்கப்பட்டதல்ல என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. பிரிஸ்பேன் டெஸ்டுக்கு முன்பு டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து பிரிஸ்பேன் டெஸ்டை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரிஷப் பந்த் நம்பமுடியாத விதத்தில் இலக்கை விரட்டி 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. 

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. தற்போது கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.

டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

இந்திய அணியினரிடம் அற்புதமான குணாதிசயமும் தன்னம்பிக்கையும் உள்ளன. 36 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு மீண்டும் வர முடியும் என நம்பிக்கை கொண்டார்கள். அணியை விட்டு விராட் கோலி சென்றாலும் அவர் எப்போதும் எங்களுடன் இருப்பார். ஏனெனில் இந்த அணி, இந்த ஒரு தொடரில் உருவாக்கப்பட்டதல்ல. கடந்த ஐந்தாறு வருடங்களில் உருவாக்கப்பட்டது. விராட் கோலியின் குணாதிசயம் அணியினருக்கும் பரவியுள்ளது. விராட் கோலி இல்லாத தருணத்தில் ரஹானே கேப்டனாக இருந்தார். நிதானமாகக் கையாளும் குணம் கொண்டவர். உள்ளுக்குள் அவர் ஒரு போராளி. விராட் கோலி இல்லாமல் அணியை நன்குக் கையாண்டுள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.