பந்தைச் சேதப்படுத்திய விவகாரம்: ஆஸி. பந்துவீச்சாளர்கள் அறிக்கை

அன்று நடந்தது தவறானது. அது நிச்சயம் நடந்திருக்கக் கூடாது.
பந்தைச் சேதப்படுத்திய விவகாரம்: ஆஸி. பந்துவீச்சாளர்கள் அறிக்கை

2018 கேப் டவுன் டெஸ்டில் பந்தைச் சேதப்படுத்தும் முயற்சி குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என ஆஸி. பந்துவீச்சாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

2018-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அவர்களுடைய பெயர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டன. 

தடைக்காலம் முடிந்த பிறகு ஸ்மித்தும் வார்னரும் வழக்கம்போல் ஆஸ்திரேலிய அணியிலும் ஐபிஎல் உள்ளிட்ட டி20 லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்கள். 2019-க்குப் பிறகு ஆஸி. அணியில் பான்கிராஃப்ட் இடம்பெறவில்லை.

சமீபத்தில் அளித்த பேட்டியில், பந்தைச் சேதப்படுத்தும் முயற்சிகளைப் பந்துவீச்சாளர்கள் அறிந்திருக்க வாய்ப்பிருந்ததாகக் கூறியிருந்தார் பான்கிராஃப்ட். 

இதையடுத்து அந்த டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடிய ஆஸி. பந்துவீச்சாளர்களான கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், லயன் ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: 

நேர்மையுடன் விளையாடுவதைப் பெருமையாகக் கொள்கிறோம். அதனால் 2018 கேப் டவுன் டெஸ்ட் தொடர்பான எங்களுடைய நேர்மையான செயல்களைச் சில பத்திரிகையாளர்களும் முன்னாள் வீரர்களும் கேள்வி கேட்பது ஏமாற்றமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பலமுறை பதில் அளித்துள்ளோம். ஆனால் மீண்டும் மீண்டும் பதில் அளிக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறோம். 

பந்தைச் சேதப்படுத்துவதற்காக ஒரு பொருள் மைதானத்துக்குக் கொண்டுவரப்பட்டது எங்களுக்குத் தெரியாது. மைதானத்தின் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டபோதுதான் அதைப் பற்றி எங்களுக்குத் தெரியும். ஆதாரம் இல்லையென்றாலும் நாங்கள் பந்துவீச்சாளர்கள் என்பதால் எங்களுக்கு இதைப் பற்றி தெரியும் என எண்ணுபவர்களுக்கு - அன்று பணியாற்றிய இரு அனுபவமிக்க நடுவர்களும் திரையில் அக்காட்சிகளைக் காண்பித்த பிறகு பந்தை வாங்கிச் பரிசோதித்துப் பார்த்தார்கள். பந்தில் சேதாரம் எதுவும் இல்லாததால் பந்தை அவர்கள் மாற்றவில்லை. மைதானத்தில் அன்று நடந்த எதையும் இது மன்னிக்காது. அன்று நடந்தது தவறானது. அது நிச்சயம் நடந்திருக்கக் கூடாது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் எனக் கோரிக்கை விடுக்கிறோம். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதிலிருந்து அடுத்தக் கட்டத்துக்கு நாம் நகர வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com