இன்னும் இரு டெஸ்டுகள் மீதமுள்ளன: ஷமி நம்பிக்கை

சிலசமயங்களில் இதுபோல நடைபெறும். அதனால் மனஉறுதியை இழப்பதில் அர்த்தமில்லை.
இன்னும் இரு டெஸ்டுகள் மீதமுள்ளன: ஷமி நம்பிக்கை

3-வது டெஸ்டில் தற்போதுள்ள நிலையால் மனஉறுதியை இழக்க மாட்டோம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி கூறியுள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான லீட்ஸ் டெஸ்டில் 345 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் மூன்றாவது ஆட்டம் புதன்கிழமை தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் சா்மா மட்டுமே அதிகபட்சமாக 19 ரன்களை சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் ஆண்டா்சன், ஓவா்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ராபின்சன், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 129 ஓவா்களில் 423/8 ரன்களை எடுத்திருந்தது. ஓவா்டன் 24 ரன்களுடனும் ராபின்சன் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனா். கேப்டன் ரூட், 165 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய தரப்பில் ஷமி 3, சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இந்த டெஸ்டில் தோல்வியடைவதிலிருந்து தப்பிக்க இந்திய அணி கடுமையாகப் போராட வேண்டிய நிலையில் உள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் ஷமி கூறியதாவது:

ஆடுகளம் மெதுவாக உள்ளதால் பந்து சீம் மற்றும் ஸ்விங் ஆவதை நிறுத்திவிடுகிறது. அதுபோன்ற சூழலில் பந்தை ஒரே இடத்தில் வீசவேண்டும். இப்போது பேட்டிங் செய்வது சுலபமாக உள்ளது. ஆடுகளம் இதுபோல இல்லாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். எங்களுடைய பேட்ஸ்மேன்களும் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து விட்டார்கள். நீண்ட நாள் கழித்து இதுபோல ஆகியுள்ளது. 2-வது இன்னிங்ஸில் நீண்ட நேரம் ஆடுவதைப் பற்றி யோசிக்க வேண்டும். 

2-வது டெஸ்டில் உள்ள தற்போதைய நிலைமை எங்களைப் பாதிக்கவில்லை. நாங்கள் மூன்று, இரண்டு நாள்களில் ஆட்டத்தை முடித்துள்ளோம். அதனால் எங்களுக்கும் ஒரு மோசமான நாள் அமையலாம். குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கலாம். சிலசமயங்களில் இதுபோல நடைபெறும். அதனால் மனஉறுதியை இழப்பதில் அர்த்தமில்லை. இன்னும் இரு டெஸ்டுகள் மீதமுள்ளன. இப்போது நாங்கள் 1-0 என முன்னிலையில் உள்ளோம். எங்களுடைய திறமை மீது நம்பிக்கை வைக்கவேண்டும். அதுதான் முக்கியம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com