இந்திய ஏ அணிக்குக்கூட இவர்களைத் தேர்வு செய்வதில்லை: ஹர்பஜன் சிங் கோபம்

உள்ளூர் போட்டிகளின் சாதனைகளைத் தேர்வுக்குழுவினர் கவனிக்கவேண்டும்.
இந்திய ஏ அணிக்குக்கூட இவர்களைத் தேர்வு செய்வதில்லை: ஹர்பஜன் சிங் கோபம்

மன்தீப் சிங், ஷெல்டன் ஜாக்சன் ஆகிய இரு வீரர்களையும் இந்திய ஏ அணிக்குக் கூட தேர்வு செய்வதில்லை எனத் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஹர்பஜன் சிங்.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். கோலி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் சஹால் மீண்டும் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் இரு வீரர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை இந்திய ஏ அணிக்குக் கூட தேர்வு செய்வதில்லை என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஷெல்டன் ஜாக்சன் - ரஞ்சி 2018/19 பருவத்தில் 854 ரன்களும் 2019/2020 பருவத்தில் 809 ரன்களும் எடுத்தார். ரஞ்சி சாம்பியன். இந்த வருடம் சையத் முஷ்டாக் அலி போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் ஏன் இந்திய ஏ அணிக்குக் கூட தேர்வாவதில்லை? ரன்கள் எடுப்பதைத் தவிர இந்திய அணிக்குத் தேர்வாக இவர் வேறு என்ன செய்யவேண்டும் என்பதைத் தேர்வுக்குழுவினர் சொல்வார்களா?

இன்னொரு வீரர் தனது பங்களிப்புக்கேற்ற வாய்ப்புகளைப் பெறாதவர் - மன்தீப் சிங். இந்திய அணிக்குக் கூட வேண்டாம், இந்திய ஏ அணிக்குக் கூட தேர்வு செய்யப்படுவதில்லை. உள்ளூர் போட்டிகளின் சாதனைகளைத் தேர்வுக்குழுவினர் கவனிக்கவேண்டும். இல்லாவிட்டால் ரஞ்சி கோப்பைப் போட்டி இருப்பதன் அவசியம் என்ன? கடைசி உள்ளூர் போட்டிகளில் அவருடைய சாதனைகளைக் கவனியுங்கள். 2020/21-ல் கரோனா காரணமாக உள்ளூர் போட்டி நடக்கவில்லை என்று கூறியுள்ளார். 

35 வயது ஷெல்டன் ஜாக்சன் இந்திய அணிக்காக இதுவரை விளையாடியதில்லை. மன்தீப் சிங், இந்தியா மற்றும் இந்திய ஏ அணிகளில் இடம்பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com