சிக்ஸர் மழை பொழிந்த தமிழக அணி: கேரளத்தை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் கேரளத்தை வீழ்த்தி தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
விஜய் சங்கர் (கோப்புப் படம்)
விஜய் சங்கர் (கோப்புப் படம்)

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் கேரளத்தை வீழ்த்தி தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் காலிறுதியில் தமிழ்நாடு, ராஜஸ்தான், பெங்கால், குஜராத், ஹைதராபாத், கேரளா, விதர்பா, கர்நாடகம் ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. 

தில்லியில் இன்று நடைபெற்ற காலிறுதியில் கேரளாவுடன் தமிழக அணி மோதுகிறது. 

டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கேரளத்தின் தொடக்க வீரர் ரோஹன் 51 ரன்களும் விஷ்ணு வினோத் ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தார்கள். 27 வயது விஷ்ணு வினோத் 26 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்து கடைசிக்கட்டத்தில் தமிழக அணிக்கு அதிர்ச்சி அளித்தார். கேரள அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. தமிழக அணி தரப்பில் சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

கடினமாக இலக்கை நன்கு விரட்டி வெற்றியடைந்தது தமிழக அணி. ஹரி நிஷாந்த் 32 ரன்களும் சாய் சுதர்ஷன் 46 ரன்களும் எடுத்து முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுக்க உதவினார்கள். இதன்பிறகு விஜய் சங்கரும் சஞ்சய் யாதவும் அதிரடியாக ரன்கள் குவித்து வெற்றிக்கு அருகில் சென்றார்கள். விஜய் சங்கர் 33 ரன்களும் சஞ்சய் யாதவ் 32 ரன்களும் எடுத்தார்கள். ஷாருக் கான் 9 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் எடுத்து கடைசிக்கட்டத்தில் கேரள அணியை நிலைகுலைய வைத்தார். தமிழக அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் விதர்பா அணி, ராஜஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் கேரள அணி 8 சிக்ஸர்களும் தமிழக அணி 10 சிக்ஸர்களும் அடித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com