பிரபல வீரர் டி வில்லியர்ஸ் ஓய்வு அறிவிப்பு

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் இன்று அறிவித்துள்ளார்.
பிரபல வீரர் டி வில்லியர்ஸ் ஓய்வு அறிவிப்பு

பிரபல கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2018 மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, 2021 டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கும் முயற்சிகள்  நடைபெற்று வந்தன. எனினும் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற டி வில்லியர்ஸ் மறுத்துவிட்டார். இன்னொரு வீரரின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்க விரும்பாததால் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற டி வில்லியர்ஸ் மறுத்துவிட்டார் என தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பெளச்சர் கூறினார்.

2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்தார். எனினும் அவருடைய விருப்பத்தை தெ.ஆ. தேர்வுக்குழு நிராகரித்தது. 10 நாடுகள் பங்கேற்ற அப்போட்டியில் தெ. ஆ. அணி 7-ம் இடம் பிடித்தது. 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் உள்ளிட்ட டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார் டி வில்லியர்ஸ். 2021 ஐபிஎல் போட்டியில் 15 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 313 ரன்கள் எடுத்தார்.  ஸ்டிரைக் ரேட் - 148.34. 

இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் இன்று அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

37 வயதில் முன்பு போல சுடர் பிரகாசமாக எரிவதில்லை. ஆர்சிபி அணியுடன் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். 11 வருடங்கள் விரைவாகக் கடந்துவிட்டன. நீண்ட யோசனைக்குப் பிறகே ஓய்வு பெற முடிவெடுத்தேன். ஆர்சிபி அணி, என்னுடைய நண்பர் கோலி, அணி வீரர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்சிபி அணி எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எப்போதும் நெருக்கமாக இருக்கும். நான் எப்போதும் ஆர்சிபி ரசிகர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com