கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐபிஎல் கோப்பையுடன் 'தளபதி' ஸ்டாலினைச் சந்திக்கிறாரா 'தல' தோனி?

சிஎஸ்கே கேப்டன் தோனி, ஐபிஎல் கோப்பையுடன் வந்து முதல்வர் ஸ்டாலினைச் சந்திப்பார் என என். ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் கோப்பையுடன் வந்து முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பார் என இந்தியா சிமெண்ட்ஸ் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான என். ஸ்ரீனிவாசன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற ஐபிஎல் கோப்பைக்கு சென்னை தியாகராய நகரிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வரா கோயில் சன்னதி முன் வைத்து பூஜை நடத்தப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் அறங்காவல் உறுப்பினரும் இந்தியா சிமெண்ட்ஸ் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான என். ஸ்ரீனிவாசன் பூஜைக்குப் பிறகு கோப்பையைப் பெற்றுக் கொண்டார். இந்தியா சிமெண்ட்ஸ் முழு நேர இயக்குநரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவருமான ரூபா குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயலர் விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதன்பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு என். ஸ்ரீனிவாசன் பதிலளித்தார்.

"டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்ட பிறகு மகேந்திர சிங் தோனி சென்னை வந்து எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்படவுள்ள நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் கோப்பையைப் பகிர்ந்து கொள்வார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் அங்கம் தோனி. தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் கிடையாது. சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாமல் தோனியும் கிடையாது. வீரர்கள் தக்கவைக்கும் விதிமுறை இன்னும் அறிவிக்கப்படவில்லை."

சென்னை சூப்பர் கிங்ஸில் தமிழகத்தைச் சேர்ந்த எவரும் இடம்பெறாதது குறித்து கேட்டதற்கு என். ஸ்ரீனிவாசன் பதிலளிக்கையில், "தமிழ்நாட்டிலிருந்து ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் பிற சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கு 13 வீரர்களை டிஎன்பிஎல் உருவாக்கியுள்ளது. டிஎன்பிஎல் கிரிக்கெட் ஆட்டங்களை ஏராளமானோர் பார்க்கின்றனர். அது மேலும் வலுப்பெறும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com