முகப்பு விளையாட்டு டி20 உலகக் கோப்பை
என் கதை முடிந்தது என நினைத்தார்கள்: கடினமான காலகட்டம் பற்றி பாண்டியா
By DIN | Published On : 18th October 2021 04:17 PM | Last Updated : 18th October 2021 04:17 PM | அ+அ அ- |

2019 ஜனவரி மாதம் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பாண்டியா, ராகுல் ஆகியோர் பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்திய கேப்டன் விராட் கோலி உள்பட பல்வேறு தரப்பினர் பாண்டியா-ராகுலை கடுமையாக கண்டித்தனர். சமூகவலைத்தளங்களிலும் இருவரையும் பலர் சாடினர். ஆஸ்திரேலியாவில் இருந்து இருவரையும் நாடு திரும்புமாறு பிசிசிஐ உத்தரவிட்டது. மேலும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பிறகு, இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரி கடிதம் அளித்தனர். பெண்களைத் தரக்குறைவாக பேசிய விவகாரம் தொடர்பாக இருவருக்கும் தலா ரூ. 20 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ மத்தியஸ்தர் டி.கே. ஜெயின் உத்தரவிட்டார்.
அக்காலகட்டம் பற்றி கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு பாண்டியா அளித்த பேட்டியில் கூறியதாவது:
எனக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டபோது, என்னைத் தனிப்பட்ட முறையில் தெரிந்த, நான் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்த பல கிரிக்கெட் வீரர்கள் என்னைப் பற்றி பேசினார்கள். அது பரவாயில்லை. என் கதை முடிந்தது என அவர்கள் நினைத்தார்கள். ஹார்திக் பாண்டியாவால் இதைச் சமாளிக்க முடியாது. அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என பலர் பேசியதைக் கேட்டேன். இந்திய கிரிக்கெட்டின் மோசமான வீரராக அப்போது நான் பார்க்கப்பட்டேன். பெங்களூரில் பயிற்சி எடுத்தபோது மனசு சரியில்லாததால் என்னால் ஒழுங்காக ஷாட் விளையாட முடியவில்லை. உங்கள் திறமையில் உங்களுக்குச் சந்தேகம் வந்தால் எல்லாம் தவறாகவே நடக்கும். மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததால் அன்று நான் அழுதேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பிறகு நான் தவறாகச் சித்தரிக்கப்பட்டேன். மற்றவர்களை விடுங்கள், என் மீது எனக்கே அதிகமான எதிர்பார்ப்புகள் உண்டு. அச்சமயத்தில் என்னால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது என்றார்.