டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி அறிவிப்பு, மூத்த வீரர்கள் நீக்கம்!
By DIN | Published On : 06th September 2021 12:50 PM | Last Updated : 06th September 2021 12:50 PM | அ+அ அ- |

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அஸாம் தலைமையிலான அணியில் சோயிப் மாலிக், சர்ஃபராஸ் அஹமது, வஹாப் ரியாஸ் ஆகிய மூத்த வீரர்கள் இடம்பெறவில்லை. தொடக்க வீரர் சர்ஜீல் கான், ஆல்ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரம் ஆகியோரும் தேர்வாகவில்லை. ஆசிப் அலி, குஷ்தில் ஷா ஆகிய இருவரும் டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
லாகூரில் செப்டம்பர் 25-ல் தொடங்கும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிராகவும் அக்டோபர் 13, 14 தேதிகளில் 2 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராகவும் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 24 அன்று தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் அணி: பாபர் அஸாம், ஷதாப் கான் (துணை கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆசிப் அலி, சோயிப் மக்சூட், அஸாம் கான் (விக்கெட் கீப்பர்), குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, இமாத் வாசிம், முகமது ஹஸ்னைன்.
மாற்று வீரர்கள்: உஸ்மான் காதர், ஷாநவாஸ் தானி, ஃபகார் ஸமான்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...