அரை சதமடிக்க முதல்முறையாக அதிகப் பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பந்த்
By DIN | Published On : 06th September 2021 03:05 PM | Last Updated : 06th September 2021 03:05 PM | அ+அ அ- |

அதிரடி ஆட்டத்துக்குப் புகழ்பெற்ற ரிஷப் பந்த், ஓவல் மைதானத்தில் அரை சதமடிக்க 105 பந்துகளைப் பயன்படுத்தியுள்ளார். முதல்முறையாக.
இந்தத் தொடரில் ரிஷப் பந்தின் பேட்டிங் மெச்சும் அளவுக்கு இல்லை. 25, 37, 22, 2, 1, 9 என குறைவான ரன்கள் எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால் நேற்று அவருடைய ஆட்டம் வித்தியாசமாக இருந்தது. தனது அதிரடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு நிதானமாக ரன்கள் சேர்த்தார். கடைசியில் 4 பவுண்டரிகளுடன் 105 பந்துகளில் அரை சதமடித்தார். பிறகு அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். டெஸ்டில் ஏழு அரை சதங்கள் அடித்துள்ள ரிஷப் பந்த், முதல் தர கிரிக்கெட்டில் 15 அரை சதங்கள் அடித்துள்ளார். இவற்றில் அரை சதமடிக்க முதல்முறையாக 105 பந்துகள் அவருக்குத் தேவைப்பட்டுள்ளன. இந்திய அணிக்கு அவருடைய பங்களிப்பு தேவை என்பதாலும் நீண்ட நாளாக அதிக ரன்கள் எடுக்காததாலும் பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்திலும் பொறுமையுடன் விளையாடி அரை சதமெடுத்தார்.
ரிஷப் பந்தின் பேட்டிங் பற்றி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் கூறியதாவது:
ரிஷப் பந்த் விளையாடச் சென்றபோது இந்திய அணிக்கு நல்ல கூட்டணி தேவைப்பட்டது. எனவே அதற்கான பொறுப்பை அவர் எடுத்துக்கொண்டார். வழக்கமாக விளையாடும் பாணியை அவர் தேர்வு செய்யவில்லை. பொறுப்புடன் விளையாடினார். இதுபோன்று விளையாடியது அணிக்கும் அவருக்கு நீண்ட காலம் பயனளிக்கக் கூடியது. இந்த இன்னிங்ஸ் ரிஷப் பந்துக்குக் கூடுதல் நம்பிக்கையைத் தரும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...