நடாலிடம் தோற்ற வீரரிடம் வெளிப்பட்ட நேர்மை: ரசிகர்கள் பாராட்டு

என்னால் நடாலை வீழ்த்த முடியவில்லையென்றால் அரையிறுதியில் விளையாடுவதற்கு நான் தகுதியில்லாதவன்.
டெய்லர் ஃபிரிட்ஸ் - நடால்
டெய்லர் ஃபிரிட்ஸ் - நடால்
Published on
Updated on
1 min read

அரையிறுதிக்குத் தகுதி பெற நான் சலுகையை எதிர்பார்க்கவில்லை எனக் காலிறுதியில் நடாலிடம் தோற்ற டெய்லர் ஃபிரிட்ஸ் கூறியுள்ளார். 

லண்டனில் நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் நடாலும் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸும் மோதினார்கள். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற நடால் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் மிகவும் தடுமாறினார். வயிற்றுத் தசைப்பிடிப்பு, கால் வலி போன்ற சிக்கல்களால் அவரால் இயல்பாக விளையாட முடியாமல் போனது. 2-வது செட்டின்போது சிறிது நேரம் காயங்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகே மீண்டும் விளையாட வந்தார். 2008 மற்றும் 2010-ல் விம்பிள்டனை வென்ற நடால், 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 (10/4) என்ற செட் கணக்கில் ஃபிரிட்ஸை வீழ்த்தி மகத்தான வெற்றியை அடைந்தார். 

அரையிறுதியில் நிக் கிர்ஜியோஸை நடால் எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அரையிறுதிச் சுற்றிலிருந்து விலகினார் நடால். இதனால் நிக் கிர்ஜியோஸ் இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறினார். 

நடால் இந்த முடிவை காலிறுதியில் எடுத்திருந்தால் டெய்லர் ஃபிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பார். நடால் விம்பிள்டனிலிருந்து விலகிய பிறகு அரையிறுதியில் ஃபிரிட்ஸை விளையாட அனுமதித்திருக்க வேண்டும் எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் இதுபோல கூறிய கருத்துக்கு ஃபிரிட்ஸ் பதில் அளித்ததாவது: இல்லை, நான் சலுகையை எதிர்பார்க்கவில்லை. என்னால் நடாலை வீழ்த்த முடியவில்லையென்றால் அரையிறுதியில் விளையாடுவதற்கு நான் தகுதியில்லாதவன். அவ்வளவுதான் என்றார். ஃபிரிட்ஸின் இந்தப் பதிலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com