
பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் புதிய கேப்டனாக ஷிகர் தவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2021-ல் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் இந்த வருடம் லக்னெள அணியில் இடம்பெற்று அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனால் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் தேர்வானார். 2018 முதல் அந்த அணியில் மயங்க் அகர்வால் இடம்பெற்றுள்ளார்.
எனினும் 2022 ஐபிஎல் போட்டியிலும் பஞ்சாப் அணி லீக் சுற்றின் முடிவில் 6-ம் இடத்தையே பிடித்தது. 2019, 2020, 2021, 2022 என கடந்த நான்கு ஆண்டுகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 6-ம் இடத்தையே பிடித்தது. ஐபிஎல் போட்டியில் இருமுறை மட்டுமே (2008, 2014) பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம், பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக டிரவர் பேலிஸ் நியமிக்கப்பட்டார். 2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியை இங்கிலாந்து வென்றபோது அந்த அணியின் பயிற்சியாளராக பேலிஸ் இருந்தார். மேலும் கொல்கத்தா அணி 2012, 2014 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றபோதும் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்ததால் தற்போது பஞ்சாப் அணி அவரை நியமித்துள்ளது. 2020, 2021 ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பேலிஸ் பணியாற்றினார்.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷிகர் தவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் ரூ. 8.25 கோடிக்கு தவனைத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. 14 ஆட்டங்களில் 460 ரன்கள் எடுத்தார். ஆனால் கேப்டனாக நியமிக்கப்பட்ட மயங்க் அகர்வால் 13 ஆட்டங்களில் 196 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஐபிஎல் போட்டியில் 11 ஆட்டங்களுக்கு கேப்டனாகச் செயல்பட்டுள்ளார் தவன். அதில் 4 வெற்றிகளும் 7 தோல்விகளும் கிடைத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.