கடைசி ஓவர்களில் நிலைகுலைந்த நியூசிலாந்து: இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்துள்ளது.
சிராஜ்
சிராஜ்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்துள்ளது.

நேபியரில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.  முதல் டி20 ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது. 2-வது டி20 ஆட்டத்தில் சூர்யகுமாரின் சதத்தால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. 3-வது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளதால் டிம் செளதி கேப்டனாகச் செயல்படுகிறார். மார்க் சேப்மன் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஹர்ஷல் படேல் விளையாடுகிறார். இதனால் இந்த ஆட்டத்திலும் சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக்குக்கு இடம் கிடைக்கவில்லை. 

ஃபின் ஆலனை 3 ரன்களுக்கு வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். ஆனால் அவருடைய அடுத்த ஓவரில் 19 ரன்கள் கொடுத்தார். மார்க் சேப்மன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸும் கான்வோவும் அருமையான கூட்டணி அமைத்தார்கள். கான்வே 39 பந்துகளிலும் பிலிப்ஸ் 31 பந்துகளிலும் அரை சதமெடுத்தார்கள். விரைவாக ரன்கள் எடுத்து ஸ்கோரை ஜம்மென்று உயர்த்திக்கொண்டு வந்தார்கள். 15-வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தது நியூசிலாந்து. கடைசி 5 ஓவர்களில் குறைந்தது 50, 60 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ தலைகீழ். சிராஜ், அர்ஷ்தீப் ஆகிய இருவரும் அற்புதமாகப் பந்துவீசி விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக எடுத்தார்கள். பிலிப்ஸ் 54 ரன்களுக்கும் கான்வே 59 ரன்களுக்கும் ஆட்டமிந்தார்கள். இதன்பிறகு சீட்டுக்கட்டு போல சரிய ஆரம்பித்தது நியூசிலாந்து. சிராஜ் தனது கடைசி ஓவரில் ஜேம்ஸ் நீஷம், சான்ட்னர் ஆகியோரை வீழ்த்தி 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். அர்ஷ்தீப் தனது கடைசி ஓவரில் டேரில் மிட்செல், இஷ் சோதி ஆகியோரை வீழ்த்தியதுடன் அந்த ஓவரில் ஆடம் மில்னையும் ரன் அவுட் செய்தார். 37 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங்.

இறுதியில் நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்துள்ளது. சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். கடைசி 8 விக்கெட்டுகளை 30 ரன்களுக்கு இழந்தது நியூசிலாந்து. இதனால் அந்த அணியின் வெற்றிவாய்ப்பு எந்தளவுக்குப் பாதிக்கும் என இனிமேல் தான் தெரியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com