கேப்டனின் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி!
மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் மலேசியாவுக்கு எதிராக 30 ரன்கள் வித்தியாசத்தில் (டி/எல் முறையில்) வெற்றி பெற்றது இந்திய அணி.
முதல் ஆட்டத்தில் இலங்கையை எளிதாக வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 2-வது ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொண்டது. இலங்கைக்கு எதிராக விளையாடிய இந்திய அணியிலிருந்து மந்தனா, பூஜா, ஸ்னேக் ராணா, ரேணுகா சிங் ஆகிய நான்கு வீராங்கனைகள் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக மேகனா, கிரண், மேக்னா சிங், ராஜேஸ்வரி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். மலேசியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.
ஷெஃபாலி வர்மாவும் மேகனாவும் இந்திய அணிக்கு அபாரமான தொடக்கத்தை அளித்தார்கள். 13.5 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்தார்கள். ஷெஃபாலி வர்மா 46, மேகனா 69 ரன்களுக்க்கு ஆட்டமிழந்தார்கள். ஷெஃபாலி வர்மா இன்று மூன்று சிக்ஸர்களை அடித்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.
மலேசியாவின் இன்னிங்ஸின்போது மழை வரும் அறிகுறி தெரிந்ததால் ஆரம்ப ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தாமல் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினார் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர். 5 ஓவர்கள் முடிந்த பிறகு தான் வேகப்பந்து வீச்சாளர் மேக்னா சிங் பந்துவீசினார். எதிர்பார்த்தது போல 6-வது ஓவரின்போது மழை குறுக்கிட்டது. அப்போது மலேசிய அணி, 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் டி/எல் முறையில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டம் முடிந்த பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கூறியதாவது: ஃபீல்டிங் செய்ய வந்தபோது சீக்கிரம் மழை வந்துவிடும் என எங்களுக்குத் தெரியும். எனவே 5 ஓவர்களை விரைவாக வீசுவதற்குத்தான் முன்னுரிமை அளித்தோம் என்றார்.