கிரிக்கெட்டிலும் பாரபட்சம் இருந்தது: ஹாக்கி வீராங்கனைகளுக்கு சேவாக் ஆறுதல்

ஹாக்கியில் நாம் விரைவாக சாதிக்கும்போது எல்லாக் கடிகாரங்களும் சரியான நேரத்துக்கு வேலை செய்யும்...
கிரிக்கெட்டிலும் பாரபட்சம் இருந்தது: ஹாக்கி வீராங்கனைகளுக்கு சேவாக் ஆறுதல்


இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு நேர்ந்தது போல இந்திய கிரிக்கெட் அணியையும் பாரபட்சமாக நடத்தியுள்ளார்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான காமன்வெல்த் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தது.

பிர்மிங்கமில் நடைபெற்ற அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பலம் வாய்ந்த ஆஸி. அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனில் இருந்தன. இதனால் ஷுட் அவுட் முறையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்கிற கோல் கணக்கில் இந்திய அணியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

ஷுட் அவுட்டின் ஆரம்பத்தில் ஆஸி. அணியின் முதல் வாய்ப்பை இந்திய அணியின் கோல் கீப்பர் சவிதா அபாரமாகத் தடுத்தார். அப்போது கடிகாரம் செயல்படாததால் (குறிப்பிட நேரத்துக்குள் கோல் முயற்சி நிகழ வேண்டும்) நடுவர் அதை ஏற்க மறுத்து ஆஸி. வீராங்கனைக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளித்தார். இதில் அவர் கோல் அடித்தார். இதை எதிர்பாராத இந்திய அணி மிகவும் ஏமாற்றமும் கோபமும் அடைந்தது. இந்திய அணியின் பயிற்சியாளர் கள நடுவரிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை. இதனால் ஆட்டத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. நடுவரின் தவறான முடிவால் இந்திய ஹாக்கி வீராங்கனைகளால் சரியான மனநிலையுடன் ஆட முடியவில்லை. இதனால் தான் அரையிறுதியில் தோற்றார்கள் என நடுவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். கடைசிவரை போராடியும் வெற்றி கிடைக்காததால் இந்திய ஹாக்கி வீராங்கனைகள் மிகவும் வேதனையடைந்தார்கள். அடுத்ததாக, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்துடன் மோதவுள்ளது. 

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், ஹாக்கி வீராங்கனைகளுக்கு ஆறுதல் கூறும் விதமாக ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

பெனால்டியை ஆஸ்திரேலியா தவறவிட்டதும் கடிகாரம் வேலை செய்ய ஆரம்பிக்கவில்லை என நடுவர் கூறுகிறார். நாம் கிரிக்கெட்டில் மாபெரும் சக்தியாக மாறும் வரை கிரிக்கெட்டிலும் இதுபோன்ற பாரபட்சங்கள் முன்பு இருந்தன. ஹாக்கியில் நாம் விரைவாக சாதிக்கும்போது எல்லாக் கடிகாரங்களும் சரியான நேரத்துக்கு வேலை செய்யும். வீராங்கனைகளின் சாதனையில் நான் பெருமை கொள்கிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com