2-வது டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவுக்கு மேலும் நெருக்கடி தரும் இங்கிலாந்து (2-ம் நாள் ஹைலைட்ஸ் விடியோ)

இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 415 ரன்கள் எடுத்துத் தொடர்ந்து ஆதிக்கம்...
2-வது டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவுக்கு மேலும் நெருக்கடி தரும் இங்கிலாந்து (2-ம் நாள் ஹைலைட்ஸ் விடியோ)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 415 ரன்கள் எடுத்துத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த டெஸ்டில் விளையாடும் 40 வயது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், சொந்த மண்ணில் 100 டெஸ்டுகளை விளையாடும் முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசி முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியை 53.2 ஓவர்களில் 151 ரன்களுக்குச் சுருட்டியது. ரபாடா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். ஆண்டர்சன், பிராட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முதல் ஆறு பேட்டர்களின் மூன்று பேரை ஆட்டமிழக்கச் செய்தார் பிராட். இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 28 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. கிராவ்லி 17, பேர்ஸ்டோ 38 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

2-ம் நாளன்று இங்கிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்து தென்னாப்பிரிக்க அணிக்கு மேலும் நெருக்கடியை அளித்தது. இங்கிலாந்து 147 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தபோது கூட தென்னாப்பிரிக்க அணி மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழந்திருக்க மாட்டார்கள். இதன்பிறகு ஆட்டத்தின் நிலைமையை மாற்றினார்கள் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் விக்கெட் கீப்பர் பேட்டர் பென் ஃபோக்ஸும். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 324 பந்துகளில் 173 ரன்கள் எடுத்தார்கள். பென் ஸ்டோக்ஸ் 103 ரன்களும் ஃபோக்ஸ் ஆட்டமிழக்காமல் 113 ரன்களும் எடுத்து அசத்தினார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 106.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 415 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 264 ரன்கள் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்க அணியில் நோர்கியா 3 விக்கெட்டுகளையும் ரபாடா, மஹாராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

2-ம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி, 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 241 ரன்கள் பின்தங்கியுள்ளது. 2-வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே தோல்வியிலிருந்து தப்பிக்க முடியும் என்கிற நிலைமையை தென்னாப்பிரிக்கா எதிர்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com