மன அழுத்தத்தில் இருந்தேன்: விராட் கோலி ஒப்புதல்

கடந்த 10 வருடங்களில் முதல்முறையாக என்னுடைய பேட்டை ஒரு மாதமாகத் தொடவில்லை.
மன அழுத்தத்தில் இருந்தேன்: விராட் கோலி ஒப்புதல்
Published on
Updated on
2 min read


100-வது சர்வதேச டி20 ஆட்டத்தில் நாளை விளையாடுகிறார் விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக. 

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றியை எந்தளவுக்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்களோ அதேபோல கோலியின் பேட்டிங்கையும் காண ஆவலாக உள்ளார்கள். 

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கோலி சதமடிக்கவில்லை. 2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற டெஸ்டில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70-வது சதம். 27-வது டெஸ்ட் சதம். அடுத்தச் சதம் எப்போது என்று நீண்ட நாளாகக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். சமீபத்தில் இங்கிலாந்தில் விளையாடிய ஆறு இன்னிங்ஸில் ( ஒரு டெஸ்ட், தலா 2 ஒருநாள், டி20) மொத்தமாக 76 ரன்கள் மட்டுமே எடுத்தார். சிறிது கால ஓய்வுக்குப் பிறகு விளையாடுவதால் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் கோலி எவ்வளவு ரன்கள் எடுக்கப் போகிறார் என்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் விராட் கோலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆடுகளத்தில் ஆக்ரோஷத்துடன் செயல்படுவதை அசாதாரணமாக நான் கருதவில்லை. எப்படித் தொடர்ந்து ஆக்ரோஷமாக இருக்க முடிகிறது என்று வெளியில் மட்டுமல்ல அணியிலும் கேட்பார்கள். ஒரு விஷயம் தான் சொல்வேன், எப்படியாவது என்னுடைய அணி வெற்றி பெற வேண்டும். மிகுந்த தயாரிப்புடன் தான் விளையாடச் செல்வேன். ஆக்ரோஷத்தன்மையை என்னால்  இயல்பாகக் கொண்டு வர முடியவில்லை. முயற்சி செய்து வெளிப்படுத்துவேன். காலையில் படுக்கையிலிருந்து எழும்போது, இந்த நாள் என்ன தரப்போகிறது என்று தெரியவில்லை, எதைச் செய்தாலும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் தான் செய்யவேண்டும் என எண்ணிக்கொள்வேன். நான் எப்போதும் இப்படித்தான். உற்சாகத்துடன் எப்படி விளையாடுகிறீர்கள் என்று கேட்பார்கள். எனக்கு கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும். ஒவ்வொரு பந்திலும் பங்களிப்பதற்கு நிறைய உள்ளது. ஆடுகளத்தில் என்னுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவேன். 

நான் மன அழுத்தத்தில் இருந்ததை ஒப்புக்கொள்ள எனக்குத் தயக்கமில்லை. கடந்த 10 வருடங்களில் முதல்முறையாக என்னுடைய பேட்டை ஒரு மாதமாகத் தொடவில்லை. சமீபத்தில் என்னுடைய ஆர்வத்தைக் கொஞ்சம் போலியாக வெளிப்படுத்துவதாக உணர்ந்தேன். இல்லை, நீ தீவிரமாகத்தான் விளையாடுகிறாய் என எனக்கு நானே நம்பவைக்க முயன்றேன். ஆனால் இயக்கத்தை நிறுத்தும்படி என்னுடைய உடல் கூறியது. ஓய்வெடுத்து இச்சூழலில் இருந்து வெளியே வா என என்னுடைய மூளை சொன்னது. இப்படி உணர்வது இயல்பானது. ஆனால் தயக்கம் இருப்பதால் இதைப் பற்றி நாம் பேச மாட்டோம். மனதளவில் பலவீனமாக நம்மைக் காட்டிக்கொள்ள மாட்டோம். பலமுள்ளவனாக நடிப்பது நம்முடைய பலவீனத்தை ஒப்புக்கொள்வதை விடவும் மோசமானது. 

மனத்தளவில் பலமானவனாக நான் பார்க்கப்படுகிறேன். அது சரிதான். ஆனால் எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை நாம் அறிய வேண்டும், இல்லாவிட்டால் நிலைமை மோசமாகி விடும். இந்தக் காலக்கட்டம் நான் உணர மறுத்த பல பாடங்களை எனக்குக் கற்றுத் தந்தது என்று கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com