இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறை: கே.எல். ராகுல் என்ன சொல்கிறார்?

கிரிக்கெட் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படித்தான் விளையாட வேண்டும் என்பதில்லை.
இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறை: கே.எல். ராகுல் என்ன சொல்கிறார்?

இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், புதன் அன்று தொடங்குகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்றது வங்கதேச அணி. 

இந்நிலையில் காயம் காரணமாக ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோரும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. இதனால் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உனாட்கட், அபிமன்யு ஈஸ்வரன், செளரப் குமார், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் டெஸ்ட் தொடர் பற்றி செய்தியாளர்களிடம் கே.எல். ராகுல் கூறியதாவது:

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு நாம் தகுதி பெற வேண்டும். எனவே அதிரடியாக நாங்கள் விளையாட வேண்டும். இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது விளையாடிக் கொண்டிருப்பது பொறுப்பற்ற ஆட்டமல்ல. அவர்கள் தங்களுக்கென உருவாக்கிக்கொண்ட பாணியில் விளையாடுகிறார்கள். அதன்படி விளையாடும் வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். கிரிக்கெட் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படித்தான் விளையாட வேண்டும் என்பதில்லை. இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் சுவாரசியமாக உள்ளது. வேகமாக ரன்கள் எடுக்கும் டெஸ்டைப் பார்க்க நன்றாக இருக்கிறது. பயமின்றி விளையாடுகிறார்கள். அதேபோல நாமும் விளையாட முடியாது. அவர்களுடைய திட்டங்களில் உள்ள சிலவற்றை நமக்கேற்றவாறு செய்து பார்க்கலாம். சூழலுக்கு ஏற்றவாறு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். 

ரோஹித் சர்மா எங்களுக்கு முக்கியமான வீரர். காயத்திலிருந்து விரைவில் குணமாகி 2-வது டெஸ்டில் விளையாடுவார் என நம்புகிறேன். புஜாரா துணை கேப்டனாகத் தேர்வானது பற்றி கேட்கிறீர்கள். துணை கேப்டன் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார் என எனக்குத் தெரியாது. இதனால் அணியில் எந்த மாற்றமும் இருக்காது. அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவருக்கான பொறுப்புகள் குறித்து தெரியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com