2-வது டெஸ்ட்: உணவு இடைவேளையில் வங்கதேசம் 82/2
By DIN | Published On : 22nd December 2022 11:14 AM | Last Updated : 22nd December 2022 11:14 AM | அ+அ அ- |

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் முதல் நாள் உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருந்ததால் சிராஜ், உமேஷ் யாதவ், உனாட்கட் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளது இந்திய அணி. இதனால் கடந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாகத் தேர்வான குல்தீப் யாதவ் இம்முறை நீக்கப்பட்டுள்ளார்.
வங்கதேச அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. மோமினுல் ஹக் 23, ஷகிப் அல் ஹசன் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். பல வருடங்களுக்குப் பிறகு தனது 2-வது டெஸ்டை விளையாடும் உனாட்கட், முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்துள்ளார். ஜாகீர் ஹசனின் விக்கெட்டை உனாட்கட்டும் ஷான்டோ விக்கெட்டை அஸ்வினும் எடுத்தார்கள்.