ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இரு பாகிஸ்தான் வீரர்கள் விலகல்
By DIN | Published On : 28th February 2022 05:37 PM | Last Updated : 28th February 2022 05:37 PM | அ+அ அ- |

பாகிஸ்தான் அணி (கோப்புப் படம்)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து இரு பாகிஸ்தான் வீரர்கள் விலகியுள்ளார்கள்.
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி.
இந்நிலையில் பி.எஸ்.எல். போட்டியில் விளையாடிய ஹசன் அலி, ஃபஹீம் அஷ்ரஃப் ஆகிய இருவரும் காயமடைந்ததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்கள். ஃபஹீம் அஷ்ரஃப் ஆல்ரவுண்டர் என்பதால் அவருடைய விலகல் பாகிஸ்தான் அணிக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஹசன் அலி கடந்த வருடம் நன்குப் பந்துவீசி அதிக விக்கெட்டுகளை எடுத்தார். இருவரும் மார்ச் 12 அன்று தொடங்கும் 2-வது டெஸ்டின்போது முழு உடற்தகுதியை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முதல் டெஸ்டில் இஃப்திகார் அஹமது, முகமது வாசிம் ஆகிய இருவரும் பாகிஸ்தான் அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.