போதும் புஜாரா, போதும் ரஹானே!

மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு ரஹானே விளையாடிய 28 இன்னிங்ஸில் 3 அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். 
ரஹானே
ரஹானே

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் 3-ம் நாளில் சொற்ப ரன்களுக்கு புஜாராவும் ரஹானேவும் ஆட்டமிழந்துள்ளார்கள். இன்னும் எத்தனை காலம் இருவரையும் பொறுத்துக்கொள்வது?

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், கேப் டவுனில் செவ்வாய் அன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஹனுமா விஹாரிக்குப் பதிலாக விராட் கோலியும் சிராஜுக்குப் பதிலாக உமேஷ் யாதவும் இந்திய அணியில் இடம்பிடித்தார்கள். தெ.ஆ. அணியில் மாற்றம் எதுவுமில்லை.  

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 77.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 79 ரன்களும் புஜாரா 43 ரன்களும் எடுத்தார்கள். தெ.ஆ. அணியில் ரபாடா 4 விக்கெட்டுகளும் மார்கோ ஆன்சென் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 76.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 14, புஜாரா 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று புஜாரா 9 ரன்களில் ஆன்சென் பந்திலும் ரஹானே 1 ரன்னில் ரபாடா பந்திலும் ஆட்டமிழந்தார்கள். பவுன்சர் பந்துகளில் அற்புதமான கேட்சுகளால் இருவரும் ஆட்டமிழந்தாலும் மீண்டும் ரன்கள் எடுக்காமல் ஏமாற்றியது ரசிகர்களிடையே கோபத்தை வரவழைத்துள்ளது.

இந்திய அணியின் மூத்த வீரர்களான இருவரும் பல ஆட்டங்களாக மோசமாக விளையாடி வருகிறார்கள். இருவரில் புஜாரா ஓரளவு பரவாயில்லை. தெ.ஆ. தொடரில் 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் 53 ரன்களும் 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 43 ரன்களும் எடுத்தார். இங்கிலாந்தில் ஒருமுறை 91 ரன்களும் அடுத்த டெஸ்டில் 61 ரன்களும் எடுத்தார். அவரளவுக்கு ஓரளவுக் கஷ்டப்பட்டு ரன்கள் எடுப்பதால் தொடர்ந்து வாய்ப்புகளைத் தந்துகொண்டிருக்கிறது இந்திய அணி. 

2018 டிசம்பரிலும் 2019 ஜனவரியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்டுகளில் சதங்கள் அடித்தார் புஜாரா. அவ்வளவுதான். 2019 ஜனவரிக்குப் பிறகு இன்று வரை புஜாரா ஒரு சதமும் எடுக்கவில்லை. மூன்று வருடங்களாக ரசிகர்களைப் பலமுறை ஏமாற்றியுள்ளார். நெ.3 வீரராக உள்ள புஜாராவின் இந்த பேட்டிங்கால் இந்திய அணி பலமுறை சிரமங்களை எதிர்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தொடர் நாயகனாகச் சாதித்த புஜாரா எங்கே?

ரஹானே இதைவிடவும் மோசம். தெ.ஆ. தொடரின் 2-வது டெஸ்டில் அரை சதமெடுத்தார். இல்லாவிட்டால் 3-வது டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. 2020 டிசம்பரில் கோலி இல்லாத இந்திய அணியை வழிநடத்தி மெல்போர்னில் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று தந்ததால் கோலிக்குப் பதிலாக ரஹானேவே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கவேண்டும் என்று பலரும் விரும்பினார்கள். ஒருவருடத்தில் காலம் தான் எப்படி மாறிவிட்டது!

சதமடித்த மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு ரஹானே விளையாடிய 28 இன்னிங்ஸில் 3 அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். 

2019 முடிவில் புஜாராவின் டெஸ்ட் சராசரி - 49.48, ரஹானே - 43.74.

கடந்த டெஸ்டின் முடிவில் - புஜாரா - 44.11, ரஹானே - 39.05. 

இருவருமே கீழே போய்க்கொண்டே இருக்கிறார்கள். கேப் டவுனிலும் இது தொடர்ந்துள்ளது. 

இதேபோல 2018, 2019-ல் மோசமாக விளையாடி வந்தார் கே.எல். ராகுல். 15 டெஸ்டுகளில் அவருடைய ரன்கள் சராசரி - 22.23 தான். ஆனால் சமீபத்தில் இங்கிலாந்து, தெ.ஆ. தொடர்களில் அவர் எப்படி விளையாடினார் என்பதை ஊரறியும். தெ.ஆ. தொடரின் 2-வது டெஸ்டில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படும் அளவுக்கு தன் மீதான நம்பிக்கையை வளர்த்துள்ளார். இதுபோல புஜாராவும் ரஹானேவும் பழைய நிலைமைக்குத் திரும்புவார்கள் எனக் கடந்த இரண்டு வருடங்களாகக் காத்திருந்தது வீணாகிவிட்டது. எப்போதாவது ஓரளவு ரன்கள் சேர்ப்பதால் நம்பிக்கை வைத்து மேலும் பல டெஸ்டுகளில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இனிமேலும் கோலியும் இந்திய அணியும் பொறுமை காக்க வேண்டுமா?

வெளியே விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், ஷுப்மன் கில் எனப் பல திறமையான வீரர்கள் காத்திருக்கிறார்கள். 

புஜாரா, ரஹானே ஆகிய இருவருக்கும் 33 வயதுதான். அதனால் இருவரும் ரஞ்சி போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று திறமையை மீட்டுக்கொண்டு வர வேண்டும். அதுவரை இந்திய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பளிப்பது அவர்களுக்கே மோசமாக அமையலாம். அதுவரை விஹாரி, ஷரேயஸ் ஐயர், ஷுப்மன் கில் ஆகியோருக்கு வாய்ப்பளித்து அவர்களுடைய திறமையையும் பரிசீலித்துப் பார்க்கலாம். எல்லோருக்கும் வாய்ப்பளிப்போம். திறமையானவர்கள் நிலைக்கட்டும். அதுவரை போதும் புஜாரா, போதும் ரஹானே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com