டி20 போட்டியில் கலந்துகொள்ள சச்சின் டெண்டுல்கர் மறுப்பு

சச்சின் உள்பட பல வீரர்களுக்குச் சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்பதால்...
டி20 போட்டியில் கலந்துகொள்ள சச்சின் டெண்டுல்கர் மறுப்பு

2022 சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் டி20 போட்டியில் கலந்துகொள்வதில்லை என சச்சின் டெண்டுல்கர் முடிவெடுத்துள்ளார். 

47 வயதான சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்டுகள், 463 ஒருநாள், 1 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களும் எடுத்துள்ளார். 2013-ல் ஓய்வு பெற்றார்.

சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் என்கிற டி20 போட்டி, 2020 முதல் நடைபெற்று வருகிறது. முதல் பருவம் கடந்த வருடம் நிறைவுபெற்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டி, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. 

கடந்த வருடம் ராய்ப்பூரில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி, இறுதிச்சுற்றில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது.

இந்தப் போட்டி இந்த வருடம் மார்ச் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த வருட சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டியில் பங்கேற்பதில்லை என சச்சின் டெண்டுல்கர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சச்சின் இந்த வருடப் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார். சச்சின் உள்பட பல வீரர்களுக்குச் சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த வருடப் போட்டியில் கலந்துகொண்ட பிறகு சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், பத்ரிநாத், இர்பான் பதான் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com