ஐபிஎல் ஏலம்: ரூ. 2 கோடியை அடிப்படை விலையாக வைத்திருக்கும் வீரர்களின் பட்டியல்

அஸ்வின், சஹால், தீபக் சஹார், ஷிகர் தவன்...
அஸ்வின்
அஸ்வின்

ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் ஆரம்பக்கட்டப் பட்டியலை 10 அணிகளுக்கும் அனுப்பியுள்ளது பிசிசிஐ. அந்தப் பட்டியலில் ரூ. 2 கோடியை அடிப்படை விலையாகக் கொண்டிருக்கும் வீரர்களின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அணிகளின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியல் உருவாக்கப்படும். அந்தப் பட்டியல் ஏலம் நடைபெறும் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்படும்.

2018-க்குப் பிறகு நடைபெறும் மெகா ஏலம் என்பதால் இந்த வருட ஏலம் இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இரு அணிகளும் தேர்வு செய்த வீரர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10 அணிகளுக்கும் பிசிசிஐ அனுப்பிய வீரர்கள் பட்டியலில் பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. மிட்செல் ஸ்டார்க், சாம் கரண், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் கெயில், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகிய டி20 பிரபலங்கள் ஏலத்தில் இடம்பெறுவதற்காகத் தங்கள் பெயரைக் கொடுக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்துவது உள்பட பல காரணங்களுக்காக இவர்கள் 2022 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். 

இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக ரூ. 2 கோடியை அடிப்படை விலையாகப் பலர் வைத்துள்ளார்கள். அந்த வீரர்களின் பட்டியல்.

இந்திய வீரர்கள்

அஸ்வின், சஹால், தீபக் சஹார், ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், புவனேஸ்வர் குமார், தேவ்தத் படிக்கல், கிருனால் பாண்டியா, ஹர்ஷல் படேல், சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, முகமது ஷமி, ஷர்துல் தாக்குர், ராபின் உத்தப்பா, உமேஷ் யாதவ்.

வெளிநாட்டு வீரர்கள்

முஜீப், அஷ்டன் அகர், நாதன் கோல்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா, ஷகிப் அல் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், சாம் பில்லிங்ஸ், சகிப் முகமது, கிறிஸ் ஜார்டன், கிரைக் ஓவர்டன், அடில் ரஷித், ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட், டிரெண்ட் போல்ட், லாகி ஃபர்குசன், குயிண்டன் டி காக், மர்சண்ட் டி லேஞ்ச், டு பிளெஸ்சிஸ், ரபாடா, இம்ரான் தாஹிர், ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, எவின் லூயிஸ், ஓடியன் ஸ்மித்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com