ஐபிஎல்: இரு புதிய அணிகள் தேர்வு செய்த வீரர்களின் பட்டியல் வெளியீடு

லக்னெள அணி கே.எல். ராகுலுக்கு ரூ. 17 கோடி சம்பளம் வழங்குகிறது.
கே.எல். ராகுல்
கே.எல். ராகுல்

ஐபிஎல் போட்டியில் புதிதாக இணைந்துள்ள லக்னெள, ஆமதாபாத் ஆகிய இரு அணிகளும் தாங்கள் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளன. 

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. 

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இரு புதிய அணிகளும் தேர்வு செய்த வீரர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கே.எல். ராகுல், ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னாய் ஆகியோரை லக்னெள அணியும் ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், ஷுப்மன் கில் ஆகியோரை ஆமதாபாத் அணியும் தேர்வு செய்துள்ளன. லக்னெள அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் ஆமதாபாத் அணி கேப்டனாக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

லக்னெள அணி கே.எல். ராகுலுக்கு ரூ. 17 கோடி சம்பளம் வழங்குகிறது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகச் சம்பளம் பெறும் வீரர்களில் கே.எல். ராகுலும் ஒருவர். 2018-ல் விராட் கோலியை ரூ. 17 கோடிக்கு ஆர்சிபி அணி தக்கவைத்தது. ஸ்டாய்னிஸுக்கு ரூ. 9.20 கோடியும் பிஷ்னாய்க்கு ரூ. 4 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகின்றன. 

ஆமதாபாத் அணி - பாண்டியா, ரஷித் கானுக்குத் தலா ரூ. 15 கோடி சம்பளம் வழங்குகிறது. ஷுப்மன் கில்லுக்கு ரூ. 8 கோடி சம்பளம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com