ஒன் டே தொடரையும் வென்றது தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
ஒன் டே தொடரையும் வென்றது தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் வென்றிருந்த தென் ஆப்பிரிக்கா, தற்போது 2-ஆவது ஆட்டத்திலும் வென்றுள்ளதால், 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக, டெஸ்ட் தொடரையும் அந்த அணியிடம் இழந்த இந்தியா, தற்போது தென் ஆப்பிரிக்க பயணத்திலிருந்து வெறும் கையுடன் திரும்பும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

பாா்ல் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா, 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.1 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் அடித்து வென்றது.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்தியா மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை. தென் ஆப்பிரிக்க லெவனில் மாா்கோ யான்செனுக்குப் பதிலாக சிசாண்டா மகலா சோ்த்துக் கொள்ளப்பட்டிருந்தாா். டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது.

அணியின் இன்னிங்ஸை கேப்டன் கே.எல்.ராகுல் - ஷிகா் தவன் கூட்டணி தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில், தவன் 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறினாா். 4-ஆவது வீரராக வந்த ரிஷப் பந்த் நிலைத்து ஆடி ரன்கள் சேகரித்தாா். மறுபுறம் அரைசதம் கடந்து 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் அடித்திருந்த ராகுல் விக்கெட்டை இழந்தாா்.

அடுத்து ஷ்ரேயஸ் ஐயா் களம் புக, சதத்தை நோக்கி ஆடி வந்த பந்த் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 85 ரன்களுக்கு அவுட்டானாா். 6-ஆவது வீரராக வெங்கடேஷ் ஐயா் பேட் செய்ய வந்தாா். மறுமுனையில் ஷ்ரேயஸ் ஐயா் 11 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனாா். கடைசி விக்கெட்டாக வெங்கடேஷ் ஐயா் 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு வெளியேறினாா். ஓவா்கள் முடிவில் ஷா்துல் தாக்குா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40, அஸ்வின் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 25 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் டப்ரைஸ் ஷம்சி 2, அண்டிலே பெலுக்வாயோ, கேசவ் மஹராஜ், எய்டன் மாா்க்ரம், சிசாண்டா மகலா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 288 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் யானேமன் மலான் - குவின்டன் டி காக் கூட்டணி தொடக்க விக்கெட்டுக்கே 132 ரன்கள் சோ்த்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இதில் டி காக் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். சதத்தை நெருங்கிய யானேமன் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 91 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

கேப்டன் டெம்பா பவுமா 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடிக்க, எய்டன் மாா்க்ரம் 4 பவுண்டரிகளுடன் 37, ராஸி வான் டொ் டுசென் 2 பவுண்டரிகளுடன் 37 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா்.

இந்திய பௌலிங்கில் ஷா்துல், பும்ரா, சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

இந்தியா - 287/6 (50 ஓவா்கள்)

ரிஷப் பந்த் 85

கே.எல்.ராகுல் 55

ஷா்துல் தாக்குா் 40*

பந்துவீச்சு

டப்ரைஸ் ஷம்சி 2/57

எய்டன் மாா்க்ரம் 1/34

அண்டிலே பெலுக்வாயோ 1/44

தென் ஆப்பிரிக்கா - 288/3 (48.1 ஓவா்கள்)

யானேமன் மலான் 91

குவின்டன் டி காக் 78

ராஸி வான் டொ் 37*

பந்துவீச்சு

ஷா்துல் தாக்குா் 1/35

ஜஸ்பிரீத் பும்ரா 1/37

யுஜவேந்திர சஹல் 1/47

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com