விடியோவைக் காண்பித்து என்னை மிரட்டினார்கள்: ஜிம்பாப்வே வீரர் அதிர்ச்சித் தகவல்

ஜிம்பாப்வேயில் 6 மாதங்களாக எங்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே மீண்டும் விளையாடுமா...
விடியோவைக் காண்பித்து என்னை மிரட்டினார்கள்: ஜிம்பாப்வே வீரர் அதிர்ச்சித் தகவல்


ஊழல் புகாரை உடனடியாகச் சொல்லாத காரணத்தால் ஐசிசி தனக்குப் பல வருடங்களுக்குத் தடை விதிக்க உள்ளதாக ஜிம்பாப்வேவின் முன்னாள் கேப்டன் பிரண்டன் டெய்லர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ஜிம்பாப்வே வீரர் பிரண்டன் டெய்லர், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011 - 2021 காலகட்டங்களில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும்  71 ஆட்டங்களில் ஜிம்பாப்வே அணி கேப்டனாகப் பணியாற்றியுள்ளார்.  

ஜிம்பாப்வே அணிக்காக 2004 முதல் விளையாட ஆரம்பித்த டெய்லர், 34 டெஸ்ட், 205 ஒருநாள், 45 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் அவர் உள்ளார். எனினும் ஒருநாள் கிரிக்கெட்டில் 11 சதங்கள் அடித்து, அதிக சதங்கள் அடித்த ஜிம்பாப்வே வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

அதிக சர்வதேச ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலில் ஆண்டி ஃபிளவர், கிராண்ட் ஃபிளவருக்கு அடுத்ததாக 3-ம் இடத்தில் உள்ளார் டெய்லர். 318 இன்னிங்ஸில் 9938 ரன்கள் எடுத்துள்ளார். அதிக சர்வதேச சதங்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலிலும் டெய்லருக்கே முதல் இடம். 17 சதங்கள். அதேபோல ஜிம்பாப்வே வீரர்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்ததும் டெய்லர் தான். 106 சிக்ஸர்கள். 

இந்நிலையில் அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை பிரண்டன் டெய்லர் இன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இந்தச் சுமையை இரண்டு ஆண்டுகளாகச் சுமந்து வருகிறேன். இது என் மனநலத்தையும் பாதித்துள்ளது. இச்சம்பவத்தை முதலிலேயே சொல்வதற்கு நான் பயந்து போயிருந்தேன்.

விரைவில் வெளியாகவுள்ள ஐசிசி விசாரணை அறிக்கை தொடர்பாக என் கருத்தை வெளியிடுகிறேன். 

2019 அக்டோபரில், இந்திய வணிகர் ஒருவர் என்னைத் தொடர்புகொண்டார். ஜிம்பாப்வேயில் டி20 போட்டி நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை விவாதிப்பதற்காக இந்தியாவுக்கு வரச் சொன்னார். இந்தப் பயணத்துக்காக எனக்கு 15,000 டாலர் வழங்கப்படும் என்றார். அந்த நேரம் ஜிம்பாப்வேயில் 6 மாதங்களாக எங்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே மீண்டும் விளையாடுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. எனவே இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டேன். ஹோட்டலில் நான் தங்கியபோது கடைசி நாள் இரவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலதிபரும் அவருடைய ஊழியர்களும் என்னை இரவு விருந்துக்கு அழைத்துச் சென்றார்கள். நாங்கள் மது அருந்தினோம். எனக்கு கொகைன் போதைப் பொருளைத் தந்தார்கள். அவர்களும் அதை உட்கொண்டார்கள். முட்டாள்தனமாக அதைக் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன். 

அடுத்த நாள் அதே நபர்கள் என் அறைக்கு வந்து போதைப் பொருளை உட்கொண்ட விடியோவைக் காண்பித்து மிரட்டினார்கள். சர்வதேச ஆட்டத்தில் ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்ய சம்மதிக்காவிட்டால் அந்த விடியோவைப் பொதுவில் வெளியிடுவோம் என்றார்கள். அறையில் ஆறு பேர் என்னை மிரட்டியதால் என் பாதுகாப்புக்காக அதற்குச் சம்மதித்தேன். என்னிடம் 15,000 டாலரை அளித்து இது முன்பணம் என்றார்கள். கூடுதல் 20,000 டாலரை வேலை முடிந்த பிறகு தருவதாகச் சொன்னார்கள். இந்தியாவை விட்டு வெளியேறுவதற்காக அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டேன். முடியாது எனச் சொல்ல முடியாது என்பதால் எனக்கு வேறு வழியில்லை. அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருந்தேன். 

வீட்டுக்கு வந்த பிறகு ஏற்பட்ட அழுத்தம் மனத்தையும் உடலையும் வெகுவாகப் பாதித்தது. அந்தத் தொழிலதிபர் பணத்தைத் திரும்பக் கேட்டார். நான் கொடுக்கவில்லை, கொடுக்கவும் மாட்டேன். இந்த விவகாரத்தை ஐசிசியிடம் புகாராகத் தெரிவிக்க நான்கு மாதங்களாகின. தாமதத்துக்கான காரணத்தை ஐசிசி புரிந்துகொள்வார்கள் என எண்ணினேன். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. விதிமுறைகள் தெரியாது என நான் பாசாங்கு காட்ட மாட்டேன். ஊழல் தடுப்பு விஷயமாகப் பல வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளேன். 

எந்தவொரு மேட்ச் ஃபிக்ஸிங்கிலும் நான் ஈடுபடவில்லை. நான் ஏமாற்றுப் பேர்வழி அல்லன். என் புகார் தொடர்பான ஐசிசியின் விசாரணையில் கலந்துகொண்டேன். என் மீது பல ஆண்டு தடை விதிக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது. இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எந்தவொரு மேட்ச் ஃபிக்ஸிங் அழைப்பையும் உடனடியாகப் புகாரளிக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர்களுக்கு இது பாடமாக இருக்கவேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக மனதளவில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வர போராடிக் கொண்டிருக்கிறேன். 

என் வாழ்க்கையை மீட்டுக்கொண்டு வர ஜனவரி 25 அன்று மறுவாழ்வு மையத்துக்குச் செல்லவுள்ளேன். என் தரப்பைக் கேட்க மக்கள் விரும்புவார்கள் என்பதாலும் என்ன நடந்தது என்பதைத் தெரிவிப்பதற்காகவும் இதைச் சொல்கிறேன். அடுத்த பல வாரங்களுக்கு என்னை அணுக முடியாது. எனது நான்கு குழந்தைகளுக்கும் அன்பான மனைவிக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சிறந்த மனிதனாக நான் மீண்டு வரவேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com