10 வருடங்களாக இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்: ஷிகர் தவன்
By DIN | Published On : 22nd July 2022 03:00 PM | Last Updated : 22nd July 2022 03:00 PM | அ+அ அ- |

என்னைப் பற்றிய விமர்சனங்களை 10 வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் ஷிகர் தவன் கூறியுள்ளார்.
இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 22 அன்றும் (இன்று) டி20 தொடர் ஜூலை 29 அன்றும் தொடங்குகின்றன.
இந்திய ஒருநாள் அணி 36 வயது ஷிகர் தவன் தலைமையில் விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 31*, 9, 1 எனச் சுமாராகவே விளையாடினார் தவன். ஒருநாள் அணியில் மட்டும் இடம்பெறும் தவன், அதிக ரன்கள் எடுக்காவிட்டால் அவருடைய இடம் கேள்விக்குறியாகிவிடும் எனப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். தன் மீதான விமர்சனங்கள் பற்றி தவன் கூறியதாவது:
எனக்கு இந்த விமர்சனங்கள் புதிதல்ல. 10 வருடங்களாக இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். மக்கள் என்னைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நான் என் திறமையை நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன். அவர்கள் பேச்சைக் கேட்டிருந்தால் இப்போது நான் இங்கே இருந்திருக்க மாட்டேன். என்னிடம் அனுபவம் உண்டு. எனவே நான் கவலைப்படவில்லை. அணிக்கான என் பங்களிப்பை அலசி, அதை மெருக்கேற்றிக்கொள்ளும்வரை எதைப் பற்றியும் கவலையில்லை.
நான் நேர்மறை எண்ணங்களைக் கொண்டவன். தன்னம்பிக்கையிலிருந்து அதைப் பெறுகிறேன். நான் இப்போது விளையாடுவதற்குக் காரணம், சில நல்ல விஷயங்களைச் செய்ததால் தான். இந்த நேர்மறை எண்ணங்களை இளைஞர்களுக்கும் பகிர விரும்புகிறேன் என்றார்.