ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவேனா?: இங்கிலாந்து கேப்டன் பதில்
By DIN | Published On : 17th June 2022 02:48 PM | Last Updated : 17th June 2022 02:48 PM | அ+அ அ- |

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவது பற்றி இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் பதில் அளித்துள்ளார்.
இங்கிலாந்து அணி மார்கன் தலைமையில் 2019 உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில் தன்னுடைய அடுத்தக்கட்ட கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மார்கன் கூறியதாவது:
ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறுவதற்கு இன்னும் நீண்ட நாள் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு நான் தயாராக வேண்டும். என்னுடைய பங்களிப்பு, உடற்தகுதி ஆகியவற்றைக் கொண்டு முடிவெடுப்பேன்.
நான் கேப்டனான பிறகு மற்ற எல்லோரையும் எப்படி மதிப்பிடுகிறேனோ அப்படித்தான் என்னுடைய பங்களிப்பையும் மதிப்பிடுவேன். என்னால் உலகக் கோப்பை வெற்றிக்குப் பங்களிக்க முடியும் எனத் தோன்றுகிறது. அதுதான் என்னை இயக்குகிறது. அணியின் நலன் தான் எனக்கு முக்கியம் என்றார்.
இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.