ரிஷப் பந்துக்கு இந்திய டி20 அணியில் இடமுண்டா?: டிராவிட் பதில்

இந்திய அணியின் ஓர் அங்கமாக ரிஷப் பந்த் உள்ளார் எனப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
ரிஷப் பந்துக்கு இந்திய டி20 அணியில் இடமுண்டா?: டிராவிட் பதில்

இந்திய அணியின் ஓர் அங்கமாக ரிஷப் பந்த் உள்ளார் எனப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது டி20 ஆட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.  டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. தொடர் நாயகன் விருதை இந்திய வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் வென்றுள்ளார். அவர் 6 விக்கெட்டுகள் எடுத்தார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 29, 5, 6, 17 என குறைவான ரன்களே எடுத்தார் இந்திய அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த். இதுவரை 47 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள பந்த், 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 123.95. இந்தத் தொடரில் வைட் ஆஃப் ஸ்டம்ப் பக்கம் பந்துவீசும்போது அதை அடித்தாட முயன்று ஆட்டமிழந்தார். நான்கு முறையும் இதேபோல ஆட்டமிழந்ததால் அதிக விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

இதனால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு இடம் கிடைக்குமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. டி20 தொடரில் மோசமாக விளையாடிய ரிஷப் பந்த் பற்றி அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்ததாவது:

அதிரடியாக விளையாடும்படி வீரர்களிடம் கூறும்போது சிலசமயங்களில் ஓரிரு ஆட்டங்களைக் கொண்டு ஒருவரை மதிப்பிடுவது கடினம். ரிஷப் பந்த் ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடினார் என நினைக்கிறேன். சராசரி அபாரமாக இல்லாவிட்டாலும் ஸ்டிரைக் ரேட் நன்றாக இருந்தது. சர்வதேச ஆட்டங்களிலும் நன்றாக விளையாடுவார் என நம்புகிறோம். ரிஷப் பந்த் அணியின் ஓர் அங்கமாகத் தொடர்ந்து உள்ளார். அவரிடம் உள்ள திறமையால் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து வைத்துள்ளோம். அவர் இடக்கை பேட்டராக இருப்பது நடுஓவர்களில் முக்கியமான விஷயம். இன்னும் நிறைய ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என அவர் நிச்சயம் எண்ணுவார். அது கவலை தரக்கூடிய விஷயமாக இல்லை. அடுத்த சில மாதங்களில் எங்களுடைய திட்டங்களில்  பெரிதாகப் பங்களிப்பார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com