டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா?: ஆர்ச்சர் பதில்
By DIN | Published On : 30th June 2022 04:39 PM | Last Updated : 30th June 2022 04:40 PM | அ+அ அ- |

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவது குறித்து பதிலளித்துள்ளார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர்.
கடந்த 15 மாதங்களில் மூன்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஆர்ச்சருக்குக் கடந்த மாதம் மீண்டும் காயம் ஏற்பட்டதால் செப்டம்பர் வரை மீண்டும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் காயம் விரைவில் குணமாகி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் விளையாடுவது பற்றி இங்கிலாந்து ஊடகத்தில் ஆர்ச்சர் தெரிவித்ததாவது:
சமீபத்தில் காயம் ஏற்பட்டு விளையாடாமல் போனாலும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் நிறைய தருணங்கள் காத்திருக்கின்றன. மார்ச் மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் இங்கிலாந்து அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் முதுகில் காயம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். அது இந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நினைக்கவில்லை. காரணம், ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு உடலில் எப்போதும் ஏதாவது ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கும்.
ஒன்று காயம் சரியானால் இன்னொறு காயம் ஏற்படுகிறது. இதனால் நான் முழுமையாக மனம் தளரவில்லை. விளையாட வந்து அப்போது காயம் ஏற்பட்டு விலக நேர்ந்திருந்தால் அது இன்னும் கடினமானதாக இருந்திருக்கும். தற்போது மீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளேன். செப்டம்பரில் மீண்டும் பந்து வீச ஆரம்பிப்பேன். சர்வதேச கிரிக்கெட்டில் விரைவில் விளையாட உதவியாக இருக்கும். அக்டோபரில் டி20 உலகக் கோப்பை இருப்பதை மறந்து விட வேண்டாம் என்றார்.