மற்றொரு பரபரப்பான ஆட்டம்: மகளிர் உலகக் கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா
By DIN | Published On : 17th March 2022 01:45 PM | Last Updated : 17th March 2022 01:45 PM | அ+அ அ- |

தோல்வியடைந்த நியூசிலாந்து (கோப்புப் படம்)
நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி.
ஹேமில்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 47.5 ஓவர்களில் 228 ரன்களை எடுத்தது. கேப்டன் சோபி டிவைன் 101 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். அமேலியா கெர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 8 ஓவர்களில் 30 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்ததால் 250 ரன்களை எடுக்க முடியாமல் போனது.
இலக்கை ஆரம்பத்தில் நன்கு விரட்டிய தென்னாப்பிரிக்க அணி கடைசிக்கட்டத்தில் தடுமாறியது. இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பானது. லாரா 67 ரன்களும் கேப்டன் சுன் லுஸ் 51 ரன்களும் எடுத்தார்கள். 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தபோதும் அதன்பிறகு தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால் தடுமாற ஆரம்பித்தது. கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் மீதமிருக்க தெ.ஆ. அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்திலேயே அட்டகாசமாக பவுண்டரி அடித்தார் மரிஸேன். கடைசியில் 49.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்க அணி. மரிஸேன் 35 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. மகளிர் உலகக் கோப்பையில் முதல்முறையாக நியூசிலாந்தைத் தோற்கடித்து புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. 5 ஆட்டங்களில் இரு வெற்றிகளை மட்டும் பெற்ற நியூசிலாந்து அணி, 4-ம் இடத்தில் உள்ளது.