'குத்துச்சண்டையால் உன்னை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள்'
By DIN | Published On : 24th May 2022 04:19 PM | Last Updated : 24th May 2022 04:19 PM | அ+அ அ- |

குத்துச்சண்டை போட்டி பயிற்சியின்போது முகத்தில் காயங்கள் ஏற்படும்போதெல்லாம் தனது தாய் அழுவதையே வாடிக்கையாக கொண்டிருந்ததாக குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் தெரிவித்துள்ளார்.
குத்துச்சண்டையின்போது முகத்தில் ஏற்படும் காயங்களால் என்னை யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் என தனது தாய் வருந்தியதாகவும் ஜரீன் உருக்கம்படக் குறிப்பிட்டுள்ளார்.
படிக்க | ஐபிஎல்: அதிக சிக்ஸர்கள் அடிக்காமல் சாதித்த அணி
கடந்த வாரம் இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் 54 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். தங்கம் வென்று நாடு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தனது தாய் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, ''குத்துச்சண்டை பயிற்சியின்போது உடலில் ஏற்படும் காயங்கள் ஏற்படும்போதெல்லாம் எனது தாய் என்னை நினைத்து அழுவார். முகத்தில் ஏற்படும் காயங்களால் என்னை யாரும் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள் என்று தாய் வருந்துவார். அந்த நேரங்களிலெல்லாம் நான் அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசுவேன். காயங்களால் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் வெற்றி பெற்று பேரும் புகழும் பெறும்போது, மணமகன்கள் நம் வீட்டு வாசலில் வரிசையில் வந்து நிற்பார்கள் என்று பதிலளிப்பேன். எனது வெற்றியின் மூலம் எனது பெற்றோருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளேன்'' எனக் குறிப்பிட்டார்.