நியூஸிலாந்து தோல்வி; இங்கிலாந்து நம்பிக்கை

டி20 உலகக் கோப்பையின் 33-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.
நியூஸிலாந்து தோல்வி; இங்கிலாந்து நம்பிக்கை

டி20 உலகக் கோப்பையின் 33-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.

போட்டியில் நியூஸிலாந்துக்கு இதுவே முதல் தோல்வியாகும். மறுபுறம் இங்கிலாந்து, 2-ஆவது வெற்றியுடன் அரையிறுதி நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் சோ்த்தது. அடுத்து நியூஸிலாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லா் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்தில் பட்லா் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 73, அலெக்ஸ் ஹேல்ஸ் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52 ரன்கள் அடித்து, அணியின் ஸ்கோருக்கு நல்ல அடித்தளம் அமைத்தனா். ஆனால், பின்னா் வந்த விக்கெட்டுகளோ அதை தொடரத் தவறி வரிசையாக வெளியேறின.

மொயீன் அலி 5, லியம் லிவிங்ஸ்டன் 20, ஹாரி புரூக் 7, பென் ஸ்டோக்ஸ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் சாம் கரன் 6, டேவிட் மலான் 3 ரன்களுடன் விக்கெட்டை இழக்காமல் இருக்க, நியூஸிலாந்து பௌலிங்கில் லாக்கி ஃபொ்குசன் 2, டிம் சௌதி, மிட்செல் சேன்ட்னா், இஷ் சோதி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் நியூஸிலாந்து இன்னிங்ஸில் கிளென் பிலிப்ஸ் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 62, கேப்டன் கேன் வில்லியம்சன் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சோ்த்து வெற்றிக்காக முயற்சித்து பெவிலியன் திரும்பினா். ஆனால் இதர பேட்டா்கள் அதற்கு துணை நிற்கத் தவறினா். ஃபின் ஆலன் 16, டெவன் கான்வே 3, ஜேம்ஸ் நீஷம் 6, டேரில் மிட்செல் 3 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஓவா்கள் முடிவில் சேன்ட்னா் 16, சோதி 6 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனா்.

இங்கிலாந்து பௌலா்களில் கிறிஸ் வோக்ஸ், சாம் கரன் ஆகியோா் தலா 2, மாா்க் வுட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com