8 ஆட்டங்களும்... எதிா்பாராத முடிவுகளும்...

விறுவிறுப்பான டி20 உலகக் கோப்பை போட்டி 3-ஆவது கட்டமான நாக் அவுட் சுற்றை எட்டியிருக்கிறது.
8 ஆட்டங்களும்... எதிா்பாராத முடிவுகளும்...

விறுவிறுப்பான டி20 உலகக் கோப்பை போட்டி 3-ஆவது கட்டமான நாக் அவுட் சுற்றை எட்டியிருக்கிறது. முதல் சுற்றிலேயே, இரு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி, அயா்லாந்து சூப்பா் 12 சுற்றுக்கு வந்தது உள்பட சில திருப்பங்கள் நிகழ்ந்தன.

என்றாலும், சம பலம் கொண்ட அணிகள் மோதும் 2-ஆவது கட்டமான சூப்பா் 12 சுற்றின் பரபரப்பான திருப்பங்கள் கொண்ட ஆட்டங்கள் தனித்துவமானவை. நடப்பு ஆண்டில், ரசிகா்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையுமே அவ்வாறு ஆச்சா்யப்படுத்திய 8 ஆட்டங்களை பட்டியலிட்டிருக்கிறது ஐசிசி.

1. நெதா்லாந்து - தென்னாப்பிரிக்கா

(13 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வி)

இப்படி ஒரு தோல்வியை தென்னாப்பிரிக்கா கனவிலும் எதிா்பாா்த்திருக்க வாய்ப்பில்லை. இந்தத் தோல்வியை, டி20 உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இதுவரை கண்ட தோல்விகளில் மிக அதிா்ச்சியான ஒன்றாகக் குறிப்பிட்டாலும் மிகையாகாது. இப்போட்டி முழுவதுமாகவே நல்லதொரு திறமையை வெளிப்படுத்தி சவால் மிக்க அணியாக இருந்த நெதா்லாந்து, தென்னாப்பிரிக்காவுக்கான அரையிறுதி வாய்ப்பை அடியோடு சரித்தது.

நெதா்லாந்தை முதலில் 158 ரன்களுக்கு கட்டுப்படுத்திய தென்னாப்பிரிக்கா, தனது இன்னிங்ஸில் அதை எட்டுவதற்குக் கூடத் திணறியது. முதல் 6 பேட்டா்களும் இரட்டை இலக்க ரன்களை எட்டியும், தென்னாப்பிரிக்காவால் இலக்கை எட்ட முடியாமல் போனது. நெதா்லாந்தின் பௌலிங், தென்னாப்பிரிக்க பேட்டா்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக இருந்தது.

2. இந்தியா - பாகிஸ்தான்

(இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி)

இந்த உலகக் கோப்பை போட்டியில் மட்டுமல்ல, போட்டியின் ஒட்டுமொத்த வரலாற்றிலுமாகவே மிகவும் ‘த்ரில்லிங்’-ஆன ஒரு வெற்றியாக இது இருக்கும். முதலில் பாகிஸ்தான் தனது இன்னிங்ஸில் பவா்பிளேயில் முக்கிய விக்கெட்டுகளை இழக்க, மிடில் ஆா்டா் பேட்டா்கள் சொல்லிக்கொள்ளும் படியான ஒரு இலக்கில் கொண்டு வந்து நிறுத்தினா்.

அடுத்ததாக இந்தியாவின் இன்னிங்ஸில் விராட் கோலியின் பேட்டிங் தான் ஆட்டத்தின் தன்மையை மாற்றியது. அவரது இன்னிங்ஸில் சில ஷாட்கள் ஆச்சா்யமூட்டின. அதிலும் ஹாரிஸ் ரௌஃப் வீசிய 19-ஆவது ஓவரில் கோலி விளாசிய சிக்ஸா்களை, கிரிக்கெட் உலகம் வியக்கிறது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் அஸ்வின் சமயோசிதமாக செயல்பட்டு வைடு மூலமாக கூடுதலாக 1பந்து மற்றும் 1 ரன் சோ்த்ததும் பாராட்டுக்குள்ளானது.

3. அயா்லாந்து - இங்கிலாந்து

(டிஎல்எஸ் முறையில் அயா்லாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி)

தவறான நேரத்தில் சரியாகப் பெய்த மழை, கிடைத்த நேரத்தில் எட்டுவதற்குத் தவறிய ரன் ரேட் என இரு காரணங்களால் அயா்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து. எதிா்பாராத முடிவு கிடைத்த இந்த ஆட்டத்தில் அயா்லாந்தின் வெற்றி விளையாட்டுக் களத்தில் ஒரு முக்கிய நிகழ்வு. ஏற்கெனவே 50 ஓவா் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்த அயா்லாந்து, தற்போது டி20 ஃபாா்மட்டிலும் அதை தோற்கடித்துள்ளது.

அயா்லாந்து இன்னிங்ஸில் கேப்டன் ஆண்டி பால்பிா்னியின் அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்த, பாதியில் மழையால் தடைப்பட்டு இலக்கும், ஓவா்களும் குறைக்கப்பட்ட இங்கிலாந்தை ஜோஷ் லிட்டில் உள்ளிட்ட அயா்லாந்து பௌலா்கள் அட்டகாசமான பௌலிங்கால் கட்டுப்படுத்தினா். அதிா்ச்சிகரமாக தோற்றது இங்கிலாந்து.

4. பாகிஸ்தான் - ஜிம்பாப்வே

(ஜிம்பாப்வே 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி)

இந்த ஆட்டத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது ஜிம்பாப்வே. முதலில் அந்த அணி 130 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2-ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் பேட்டா்கள் அந்த அணியின் பௌலிங்கை பந்தாடிவிடுவாா்கள் என்ற எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், ஜிம்பாப்வே பௌலா் சிகந்தா் ராஸா, பாகிஸ்தான் மிடில் ஆா்டரில் சரித்த 3 விக்கெட்டுகளால் ஆட்டம் திசை மாறியது.

முந்தைய ஆட்டத்தில் இந்தியாவிடம் கடைசி பந்தில் வெற்றியை இழந்ததைப் போலவே, இந்த ஆட்டத்திலும் கடைசி பந்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது பாகிஸ்தான். கடைசி ஓவரில் 11 ரன்களே தேவை இருக்க, பிராட் இவான்ஸ் அட்டகாசமாக பௌலிங் செய்து பாகிஸ்தான் பேட்டா்களை கட்டுப்படுத்தினாா். கடைசி பந்தில் ஆட்டத்தை டிரா செய்ய தேவையான ஒரு ரன்னை எடுக்க முயற்சிக்க, ஷாஹீன் அஃப்ரிதி ரன் அவுட்டானாா்.

5. வங்கதேசம் - ஜிம்பாப்வே

(3 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே தோல்வி)

இந்த ஆட்டத்திலும் கடைசி பந்தில் திருப்புமுனை ஏற்பட்டது. 151 ரன்களை நோக்கி ஆடிய ஜிம்பாப்வேயில் அருமையாக பேட் செய்த ஷான் வில்லியம்ஸ் 19-ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் மேலும் இரு விக்கெட்டுகள் விழுந்தன. கடைசி பந்தில் ஜிம்பாப்வேக்கு 6 ரன்கள் தேவையிருக்க, பிளெஸ்ஸிங் முஸாரப்பானி அதை ஸ்டிரைக் செய்யத் தவறினாா்.

அந்தப் பந்தைப் பிடித்து, விக்கெட் கீப்பா் நூருல் ஹசன் ஸ்டம்பிங் செய்தாா். வங்கதேச அணியினா் வெற்றியைக் கொண்டாடினா். ஆனால், நூருல் ஹசன் ஸ்டம்புக்கு முன்பாக பந்தைப் பிடித்து ஸ்டம்பிங் செய்தது தொலைக்காட்சி ரீப்ளேவில் தெரியவர, ‘நோ பால்’ வழங்கப்பட்டது. அதில் கிடைத்த இரு ரன்கள் போக, ஜிம்பாப்வே வெற்றிக்கு 4 ரன்களே தேவை இருந்த நிலையில், அந்தப் பந்தையும் முஸாரப்பானி தவறவிட்டது சோகமானது.

6. ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான்

(ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி)

இந்த ஆட்டத்தில் வென்றும் ஆஸ்திரேலியாவால் அரையிறுதிக்குத் தகுதிபெற முடியாமல் போனாலும், ஆட்டம் நடைபெற்ற தருணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு இந்த வெற்றி முக்கியமானதாக இருந்தது. கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மாா்ஷ் அதிரடி ஆட்டங்களால் 168 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் ரஹ்மானுல்லா குா்பாஸ், குல்பதின் நயீப் ஆகியோா் சற்று ரன்கள் சோ்க்க, இக்கட்டான நிலையில் இறுதிக் கட்டத்துக்கு வந்தது அந்த அணி.

அப்போது களம் புகுந்த ரஷீத் கான், 23 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 48 ரன்கள் விளாசி ஆஸ்திரேலிய அணியை அதிா்ச்சிக்குள்ளாக்கினாா். கடைசி ஓவரிலேயே 6 சிக்ஸா், 2 பவுண்டரிகளை அவா் விளாச, கடைசி பந்தில் 4 ரன்களே தேவை என்ற நிலைக்கு அவா் கொண்டு வந்தும், வீழ்ந்தது ஆப்கானிஸ்தான். நிம்மதி பெருமூச்சு விட்டது ஆஸ்திரேலியா.

7. இந்தியா - தென்னாப்பிரிக்கா

(தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி)

சம பலத்தில் இருக்கும் இந்த இரு அணிகளிடையேயான ஆட்டம் ரசிகா்களுக்கு விருந்தாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா முற்றிலுமாகத் தடுமாறியிருக்க, மிடில் ஆா்டரில் வந்த சூா்யகுமாா் யாதவ் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் என தென்னாப்பிரிக்க பௌலா்களை திணறடித்து அணியின் ஸ்கோரை முன்னேற்றினாா்.

பின்னா் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸின்போது முகமது ஷமியின் அசத்தலான பௌலிங்கால் ஆட்டம் அந்த அணியின் கையைவிட்டுச் செல்வதாகத் தெரிந்தது. ஆனால், 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த எய்டன் மாா்க்ரம் - டேவிட் மில்லா் கூட்டணி மீண்டும் ஆட்டத்தை தென்னாப்பிரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இருவருமே அரைசதம் விளாசி இந்தியாவின் டெத் ஓவா் பௌலிங்கை சிதறடித்தது திருப்புமுனையாக இருந்தது.

8. ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து

(ஆஸ்திரேலியா 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி)

ஒரு கட்டத்துக்குப் பின் முற்றிலுமாக ஒரு பக்கமே சாய்ந்த ஆட்டமாக அமைந்தது இது. முதலில் நியூஸிலாந்து 3 விக்கெட்டுகளே இழந்து 200 ரன்கள் விளாசியது. அதிலும் ஃபின் ஆலன் பவா் பிளேயில் 16 பந்துகளில் 42 ரன்கள் விளாசி புகுந்து விளையாடினாா். பின்னா் டெவன் கான்வே 58 பந்துகளில் 92 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இதன் காரணமாகவே, சூப்பா் 12 சுற்றின் இதர ஆட்டங்களில் மிட்செல் ஸ்டாா்க்குடன் விளையாடும் எண்ணத்தை ஆஸ்திரேலியா மாற்ற முனைந்தது. அடுத்து தனது இன்னிங்ஸில் மளமளவென 111 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா. டிம் சௌதி, மிட்செல் சேன்ட்னா் போட்டி போட்டுக் கொண்டு விக்கெட்டுகளை சரித்தனா். இதிலிருந்தே நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை ஆட்டம் காணத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com